சொத்துத் தகராறில் கொலை செய்ததாக வாக்குமூலம்… நடந்தது என்ன?
கும்பகோணம் அருகே சொத்துத் தகராறில் நடந்த இரட்டைப் படுகொலையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சொத்துத் தகராறின் போது கைவிரலைக் கடித்ததால் இரட்டைப் படுகொலை செய்ததாக குற்றவாளிகள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். கும்பகோணம் அருகே உள்ள கிளாரட் நகரைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் காமராஜ். இவரது தந்தை பார்த்திபன் காமராஜின் நண்பர் சக்திவேல். பார்த்திபனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலச் செயலாளர் ராஜவேலுவுக்கும் சொத்துக்கள் பாகப்பிரிவினை தொடர்பாக நீண்ட காலமாக பிரச்னை இருந்து வந்தது. சொத்துக்கள் பிரிக்கப்பட்டாலும் அவை முறையாகப் பிரிக்கப்படவில்லை என்ற ஆதங்கம் ராஜவேலுக்கு இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக இருதரப்பிற்கும் இடையே அடிக்கடி தகராறுகளும் நடந்ததாகக் கூறப்படுகிறது. சொத்துத் தகராறு தொடர்பாக கடந்த 8-ஆம் தேதி, நாச்சியார்கோவில் காவல்நிலையத்தில் இருதரப்பும் புகாரளித்த நிலையில் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடந்துள்ளது.
அப்போது நடந்த திடீர் தகராறில் ஆத்திரமடைந்த வழக்கறிஞர் காமராஜ், ராஜவேலுவின் கைவிரலைக் கடித்து விட்டதாகக் கூறப்படுகிறது. அதுவரை தகராறில் மட்டுமே ஈடுபட்டு வந்த ராஜவேலு தரப்பு இந்த சம்பவத்தால் கடும் ஆத்திரமடைந்துள்ளது. அதனால் காமராஜைத் தீர்த்துக் கட்ட முடிவு செய்துள்ளது. திட்டமிட்டபடி, திங்கள் இரவு, இருசக்கர வாகனத்தில் தந்தை பார்த்திபனுடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த காமராஜை வழிமறித்து 6 பேர் கொண்ட கும்பல் படுகொலை செய்துள்ளது. கொலைச் சம்பவத்தை வீட்டு வாசலில் இருந்து, காமராஜின் நண்பர் சக்திவேல் பார்த்து விட்டதால் அவரையும் படுகொலை செய்துள்ளனர். இந்த வழக்கில், ராஜவேலு மகன் 33 வயதான ஆனந்த், அவரது நண்பர்கள் 45 வயதான ராஜசேகர், 41 வயதான சசிகுமார், 22 வயதான சம்பத் ஆகிய 4 பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.சொத்துக்கள் பிரிக்கப்பட்ட நிலையில் குடிசை வீட்டு நிலம் யாருக்கு சொந்தம் என்ற தகராறில் இரட்டைப் படுகொலைகள் நடந்த சம்பவம், கிளாட் நகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.