சென்னை முழுவதும் பாதுகாப்பு பணியில் 10,000 போலீசார் – பல்வேறு கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தி.
விநாயகர் சதுர்த்தி பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்களுக்கு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக பொதுமக்கள் வீட்டில் மட்டுமே விநாயகர் சிலையை வைத்து வழிபடவேண்டும், பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிப்பட அனுமதி இல்லை. மேலும் வீட்டில் வைத்த சிலையை தனி நபர் கொண்டு சென்று நீர் நிலைகளில் கரைக்க அனுமதி அளித்துள்ளனர். இது தொடர்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து அமைப்புகளிடம் கூடுதல் ஆணையர்கள் தலைமையில் மூன்று நாட்களாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அரசாங்கம் விதித்த கட்டுப்பாடுகள் முழுவதும் அவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டு அதனை பின்பற்றுவதாக அமைப்பினர் உறுதி அளித்து சென்றனர்.
எனினும் ஒரு சில இந்து அமைப்புகள் தடையை மீறி ஊர்வலம் நடத்த உள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் அரசு உத்தரவை மீறி விநாயகர் சிலை வைத்து ஊர்வலம் நடத்தக்கூடிய பிரச்சனைக்குரிய இடங்களை கண்காணித்து கூடுதல் பாதுகாப்பு பணியில் அதிகளவில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் சென்னை முழுவதும் பிரச்சனைக்குரிய பகுதிகளான திருவல்லிக்கேணி, ஜாம்ஜார், புதுப்பேட்டை, புளியந்தோப்பு, ஓட்டேரி உட்பட 50-க்கும் மேற்பட்ட இடங்களை போலீசார் கண்டறிந்து கூடுதல் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.
இதுமட்டுமில்லாமல் வழக்கமாக விநாயகர் சிலையை கரைக்கும் இடங்களான எண்ணூர் கடற்கரை, திருவொற்றியூர் கடற்கரை, காசிமேடு துறைமுகம், நீலாங்கரை கடற்கரை, பட்டினப்பாக்கம் ஸ்ரீனிவாசபுரம் கடற்கரை ஆகிய பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பில் ஈடுபட உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தனி நபர் தவிர அமைப்பு ரீதியாகவோ, அதிக கூட்டம் சேர்த்து சிலைகளை கரைக்க முயற்சி செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் விநாயகர் சதுர்த்தி தினமன்று எந்த வித அசாம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்க சென்னை முழுவதும் 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அரசு உத்தரவை மீறி பொது இடங்களில் சிலை வைத்து வழிபாடு செய்தால் காவல்துறை உதவியுடன் அரசு அதிகாரிகள் சிலையை அகற்றும் பணியில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அமைப்பினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.