கைக்குத்தல் அரிசி மறைந்து பாலீஷ் செய்யப்பட்ட அரிசி உடல் ஆரோக்கியத்துக்குக் கெடுதல் என்று சொல்லும் போதே மக்கள் அதற்கு மாற்றாக தானியங்களை பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள். தானியங்களில் மிக முக்கியமானதாக ஊட்டசத்துமிக்கதாக சொல்லப்படும் கோதுமை உணவு தான் மக்கள் விரும்பும் உணவில் முதன்மையானதாக இருக்கிறது.
ஊட்டச்சத்துகளும், வைட்டமின்களும், துத்தநாகம், சிலிகான், தாமிரம், பொட்டாசியம், கால்சியம் சத்துகள் கோதுமைமாவில் நிறைந்திருக்கின்றன. நாள் முழுவதும் ஆற்றல் அளிக்கும் உணவில் கோதுமை உணவு சிறப்பாக செயல்படுகிறது.உடலுக்கு இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தியை தரும் கோதுமை நோய்களிலிருந்தும் காப்பாற்றுகிறது. இரும்புச்சத்து கோதுமையில் இருப்பதால் உடலில் ஹீமோகுளோபின் பற்றாக்குறை இல்லாமல் இருக்கலாம்.
கோதுமையில் கோதுமை ரவை, கோதுமை மாவு போன்றவை தயாரிக்கப்படுகிறது.மைதா என்னும் கேடுதரும் மாவும் இதிலிருந்து தான் தயாரிக்கப்படுகிறது. ஆனால் இதன் நிறத்துக்காக பல கெடுதல் தரும் இரசாயனங்கள் கலப்பதால் இதை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். ஆனால் கோதுமை அப்படியல்ல. காய்ச்சல் காலங்களில் அரிசி கஞ்சியும், கோதுமை பிரட் எடுத்துகொள்ளவும் செய்கிறோம். தினமும் ஒரு வேளை சப்பாத்தியை உணவாக எடுத்துகொண்டால் உடலுக்கு தேவையான சக்தி கிடைத்துவிடுகிறது என்பதால் மக்கள் சப்பாத்தியை அதிகம் ருசிக்க தொடங்கிவிட்டார்கள்.
அதிக உடல் எடையால் அவதிப்படுபவர்கள் தினமும் சப்பாத்தியை உட்கொண்டு வந்தால் உடல் எடை கட்டுக்குள் வரும்.மற்ற உணவுகளை காட்டிலும் இதில் கலோரி குறைவாக இருப்பதால் உடல் எடை விரைவில் கட்டுக்குள் வரும்.
காலை வேளையை காட்டிலும் இரவு நேரங்களில் சப்பாத்தி சாப்பிடுவது நல்லது. குறிப்பாக நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் பிரச்சனைக்குள்ளானவர்கள், நாள்பட்ட நோயாளிகளுக்கு எப்போதுமே சிறந்த உணவு சப்பாத்தி என்று சொல்லலாம். சப்பாத்தியை எடுத்துகொள்ளும் போது பசி உணர்வு நீண்ட நேரம் இருக்காது என்பதால் இவர்களுக்கு ஏற்ற டயட் ஆக சப்பாத்தியை கூறுகிறார்கள்.
வயதானவர்கள் சப்பாத்தி சிறந்த உணவு என்றாலும் இரவு நேரங்களில் அவர்களுக்கு செரிமான பிரச்சனை இருப்பதாக சப்பாத்தியை தவிர்க்கிறார்கள். சர்க்கரை நோயாளிகளும் ரத்த அழுத்தம் இருப்பவர்களும் எண்ணெயில்லாமல் சுக்காவாய் சாப்பிடுவதுண்டு. ஆனால் இதனால் அதிக அளவு நீர் தாகம் உண்டாகும். இப்படி சாப்பிடுவதால் செரிமானப்பிரச்சனையும் உண்டாகும். சப்பாத்தி இடும் போது எண்ணெய் சேர்க்கவில்லை என்றாலும் மாவு தயாரிக்கும் போது அதை மிருதுவாக பிசைய வேண்டும்.சப்பாத்தி இடும் போது அதிக அளவு எண்ணெய் பயன்படுத்த கூடாது. அதே போன்று கோதுமையை சுத்தம் செய்து மாவாக அரைக்கும் போது சில பொருள்களை சேர்த்து அரைத்தால் செரிமானம் எளிதாகும்.
ஊட்டச்சத்து நிறைந்த கோதுமையை அரைக்கும் போது உடன் சோயா, கொண்டைக்கடலை சேர்த்து அரைப்பதுண்டு. இதனால் ஊட்டச்சத்து கூடுதலாக உடலுக்கு கிடைக்கும் என்றாலும் செரிமான பிரச்சனையை சரிசெய்ய இவை மட்டும் போதாது.
ஒரு கிலோ கோதுமைக்கு 50 சீரகமும், 25 கிராம் ஓமமும் சேர்த்து அரைத்தால் செரிமானப் பிரச்சனை உண்டாகாது. தற்போது கோதுமையை கடையில் வாங்கி அரைப்பதை காட்டிலும் மாவாக வாங்குபவர்கள் மாவு பிசையும் போது வெந்நீரில் சீரகத்தை சேர்த்து கொதிக்க வைத்து அந்த நீரை சேர்த்து பிசைந்து சப்பாத்தி செய்தால் செரிமானப் பிரச்சனை வராமல் ஜீரணம் எளிதாகும்.சப்பாத்தி திரட்டுவதற்கு அரை மணி நேரம் முன்பு மாவு பிசைந்தால் போதும். அதிக நேரம் வைத்திருந்தால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும் என்று சிலர் நினைப்பதுண்டு ஆனால் இவை மாவுக்கு ஒரு வித புளிப்பு தன்மையை அளிக்கும். ஆனால் சுவைக்கும் போது தெரியாது.
அனைத்து வயதினரும் இந்த மசாலா சேர்த்த சப்பாத்தியை மறுக்காமல் சாப்பிடுவார்கள். சீரகமும், ஓமமும் உடலுக்கு மேலும் சத்து தரும் என்பதால் இவை வேறு வித பாதிப்பையும் உண்டாக்காது. இந்த இரண்டின் வாசம் விரும்பாதவர்கள் வெந்நீரில் மாவு பிசைந்தாலும் சப்பாத்தி 2 மணி நேரம் வரை மிருதுவாக இருக்கும். தினமும் மூன்று வேளையும் சப்பாத்தி சாப்பிட்டாலும் செரிமானம் எளிதாகும். சிறு குழந்தைகளுக்கு தயார் செய்யும் போது மாவு பிசையும் போது நெய் அல்லது வெண்ணெய் சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும். செரிமானமும் எளிதாகும்.
செரிமானம் தாமதமாகும் என்பதால் தான் சப்பாத்தியை நீரிழிவு இருப்பவர்களுக்கு பரிந்துரைப்பது என்று நினைக்கலாம். செரிமானம் தாமதமாவது வேறு செரிமானத்தில் கோளாறை உண்டாக்கி நெஞ்செரிச்சல் , அஜீரணகோளாறுகளை உண்டாக்குவது வேறு. வெகு சிலருக்கு இந்த பிரச்சனை உண்டாவது இயல்பு என்பதால் உரிய முறையில் சப்பாத்தியை இட்டு எடுத்துகொள்வதன் மூலம் செரிமானபிரச்சனை இல்லாமல் உடலுக்கு வேண்டிய சத்தை பெறலாம்.