கொரோனா பாதிப்புக்கு இந்தியா தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பு மருந்தை மனித உடலில் செலுத்தி பரிசோதனை செய்யும் முயற்சி கடந்த ஜூலை 23ஆம் தேதி தொடங்கியது. இந்தியாவில் 12 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக தடுப்பூசி செலுத்தி 14 நாட்கள் ஆன நிலையில், மீண்டும் அந்த நபர்கள் மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டு மருத்துவச் சோதனைக்கு பிறகு மீண்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
முதற்கட்டத்தில் 18 வயது முதல் 55 வயதுடைய ஆரோக்கியமான தன்னார்வலர்கள் உடலில் கோவாக்சின் செலுத்தப்பட்ட நிலையில், இரண்டாம் கட்டத்தில் வயது வரம்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, 12 வயதுடைய இளம் பருவத்தினர் முதல் 65 வயது முதியவர்கள் வரை ஈடுபடுத்தப்பட உள்ளனர்.இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாதத்தில் தொடங்கவுள்ள இரண்டாம் கட்ட ஆய்வில், சுமார் 150 நபர்களை தமிழகத்தில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மொத்தம் மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ள மனித உடல் சோதனையில், மூன்றாவது கட்டத்தில் அனைத்து தரப்பு மக்களையும் கொண்டு சோதனை செய்யப்பட்டு, அதன் பிறகு பயனுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.