கோயம்பேடு சந்தை கட்டுப்பாடுகளுடன் திறப்பு!
கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட கோயம்பேடு காய்கறி சந்தை, 5 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்டது. திருமழிசை தற்காலிக சந்தையில் இயங்கிய 194 காய்கறி கடைகள் மட்டும், கோயம்பேடு சந்தையில் வியாபாரம் செய்ய முதற்கட்டமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.நள்ளிரவு 12 மணி முதல் காலை 9 மணி வரையே சந்தை செயல்படும். அதிகாலையிலிருந்து காலை 9 மணி வரையே விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. மொத்த வியாபாரிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். சந்தையில் 12 வாயில்கள் உள்ள நிலையில் அதில் 4 மட்டுமே திறக்கப்பட்டுள்ளன.இதனால், காய்கறி வாகனங்கள் சரியான நேரத்திற்கு உள்ளே வர முடியாமலும், வெளியே செல்ல முடியாமலும் திணறுகின்றன.
கடந்த மார்ச் மாதத்தில், கோயம்பேடு சந்தையில், வேலை செய்தவர்கள் மூலம் கொரோனா பரவல் அதிகமானது. இதன் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டது. இதனை தொடர்ந்து, மாற்றாக திருமழிசை பகுதியில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்கப்பட்டது. அதேபோல், மாதவரத்தில் பழ சந்தையும், வானகரத்தில் பூ சந்தையும் அமைக்கப்பட்டது.இந்நிலையில், அங்கு போதிய வசதிகள் இல்லாத காரணத்தால், மீண்டும் கோயம்பேடு சந்தையை திறந்து விட வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, காய்கறி சந்தை இன்று முதல் கட்டுப்பாடுகளுடன் திறக்க அரசு அனுமதியளித்தது.