கண்களில் துணியை கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டும் மாணவியின் சாதனையை, கலெக்டர் சந்தீப்நந்தூரி பாராட்டி, சைக்கிள் பரிசு வழங்கினார்.
கண்ணில் துணியை கட்டிக் கொண்டு சைக்கிள் ஓட்டும் சிறுமி
சைக்கிளை சுருதி கண்களை துணியால் கட்டிக் கொண்டு ஓட்டிய போது எடுத்தபடம்.
செய்யாறு தாலுகா முனுகப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் குமரன். பட்டு நெசவாளி. இவரது மனைவி அனிதா. இவர்களது மகள் சுருதி (வயது 12). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி சுருதி கண்களில் துணியை கட்டிக் கொண்டு சைக்கிள் ஓட்டும் திறமை கொண்டவர்.
மேலும் அவர் கண்களை மூடிய படியே கையில் வைத்திருக்கும் ரூபாய் தாளின் மதிப்பு, மோட்டார் சைக்கிள் மற்றும் காரில் எழுதப்பட்ட வாக்கியம், எண் ஆகியவற்றை தெளிவாக கூறும் திறமையும் கொண்டவர்.அத்துடன் நாம் எழுதும் சொல்லை அப்படியே எழுதி காண்பிக்கிறார்.
இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு துணியால் கண்களை கட்டிக் கொண்டு முனுகப்பட்டில் இருந்து வந்தவாசிக்கு 36 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் சென்று சாதனை படைத்து உள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்தனர். இவருடைய அடுத்த முயற்சியாக திருவண்ணாமலையில் இருந்து ஆரணிக்கு சுமார் 60 கிலோ மீட்டர் தூரம் கண்களை மூடியபடி சைக்கிளில் செல்ல பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இதற்கு தேவையான ஸ்போர்ட்ஸ் சைக்கிள் வாங்க வசதியில்லாததால் சிறுமி சுருதியின் பெற்றோர் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் சந்திப்நந்தூரியை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்து இருந்தனர். இதையடுத்து நேற்று காலை அச்சிறுமியை கலெக்டர் அலுவலகத்திற்கு வரவழைத்து கலெக்டர் சந்திப்நந்தூரி, சிறுமி சுருதியை பாராட்டி, ஸ்போர்ட்ஸ் சைக்கிளை பரிசாக வழங்கி ஊக்குவித்தார்.