கட்சி கொடியில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் வண்ணங்கள் இடம் பெற்று விடக்கூடாது என்பதில் ரஜினிகாந்த் உறுதியாக உள்ளார்.
புத்தாண்டில் ஜனவரியில் புதிய கட்சியின் அறிவிப்பை அவர் வெளியிடுகிறார். எந்த தேதியில் கட்சியை தொடங்குவது என்பது பற்றி ரஜினிகாந்த் தொடர்ந்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த 3-ந்தேதி தனது அரசியல் பிரவேசத்தை உறுதி செய்த ரஜினி அதன் பின்னர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான அர்ஜுனமூர்த்தி, மேற்பார்வையாளரான தமிழருவி மணியன் ஆகியோருடன் 2 முறை ஆலோசனை நடத்தி இருக்கிறார்.
ரஜினிகாந்தின் வீட்டுக்கு சென்று அர்ஜுனமூர்த்தி, தமிழருவி மணியன் இருவரும் கடந்த வாரம் ஆலோசனை நடத்தி இருந்தனர். இந்த நிலையில் நேற்று இருவரையும் கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்துக்கு வரவழைத்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது புதிய கட்சியை தொடங்குவது குறித்தும், கட்சியின் கொடியை வடிவமைப்பது பற்றியும் பல்வேறு கருத்துக்களை ரஜினி கேட்டு அறிந்தார்.
தற்போது ரஜினி மக்கள் மன்றத்துக்கு பயன்படுத்தப்பட்டு வரும் கொடி நீல நிறத்தில் உள்ளது. அதில் நட்சத்திரமும் இடம் பெற்றுள்ளது. இந்த கொடியை தேர்தலுக்கு பயன்படுத்தாமல் கட்சிக்கு புதிதாக கொடி உருவாக்கப்பட உள்ளது.
அதில் என்னென்ன வண்ணங்கள் இடம் பெற வேண்டும் என்பது பற்றியும் ரஜினி ஆலோசித்து வருகிறார். சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் கட்சி கொடியில் வண்ணங்கள் இடம் பெற்று விடக்கூடாது என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.
அனைத்து தரப்பினரும் வரவேற்கும் வகையில் கட்சி கொடி உருவாக்கப்பட்டு வருகிறது.
கட்சிக்கு என்ன பெயர் வைக்கலாம் என்பது பற்றி பல்வேறு தரப்பினரிடமும் ரஜினி தொடர்ந்து கருத்துக்களை கேட்டு வருகிறார். தேர்தலுக்கு 5 மாதங்களே இருக்கும் நிலையில் புதிய கட்சியை தொடங்குவதால் மக்கள் மனதில் எளிதில் பதியும் வகையில் பெயர் இருக்க வேண்டும் என்று ரஜினி விரும்புகிறார்.
மக்களை கவரும் வகையில் கட்சிக்கு பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய கட்சிக்கு சைக்கிள் சின்னத்தை கேட்டு பெறலாம் என்று ஏற்கனவே முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த சைக்கிள் சின்னம் “அண்ணாமலை” படத்தில் வரும் பால்கேனுடன் ரஜினி இருக்கும் வகையில் வடிவமைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஜனவரி மாதம் புதிய கட்சி அறிவிப்பை பிரம்மாண்ட அளவில் வெளியிட ரஜினி திட்டமிட்டுள்ளார்.
கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் முறையாக பதிவு செய்து அங்கீகாரத்தை பெற்ற பிறகு சைக்கிள் சின்னம் கேட்டு விண்ணப்பிக்கவும் ரஜினி முடிவு செய்திருக்கிறார்.