குழந்தையை கடத்திய தொழிலாளி கைது..!
திருப்பூர் மாநகர் நல்லூர் பொன்முத்து நகரைச் சேர்ந்தவர் கட்டிட சென்ட்ரிங் ஒப்பந்ததாரர் கே.முருகானந்தம் (39). இவருக்கு மனைவி, 11 வயதில் மகள், மூன்றரை வயது மகன் நதீஷ் சத்யா ஆகியோர் உள்ளனர். முருகானந்தத்திடம் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கார்கூடல் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (27) என்பவர் வேலை செய்து வந்தார். இவர், தனது மனைவியுடன் நல்லூர் லட்சுமி நகர் பகுதியில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக சம்பளப் பிரச்சினை குறித்து முருகானந்தம் மீது சுரேஷ் அதிருப்தியில் இருந்துள்ளார்.
கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாத சுரேஷ், நேற்று முன்தினம் மாலை முருகானந்தத்தின் வீட்டுக்கு சென்றுள்ளார். முருகானந்தத்தின் மனைவி வேலைக்கு சென்றுவிட, குழந்தைகள் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். நதீஷ் சத்யாவை தந்தை அழைத்து வரக் கூறினார் என்று 11 வயது சிறுமியிடம் தெரிவிக்க, சுரேஷுடன் அனுப்பி வைத்துள்ளார். சிறுவனுடன் ஆட்டோவில் ஏறிய சுரேஷ், திருப்பூரிலிருந்து திருவண்ணாமலை செல்லும் பேருந்தில் புறப்பட்டு சேலம் நோக்கி சென்றுள்ளார்.
குழந்தை கடத்தப்பட்டதை அறிந்த முருகானந்தம், திருப்பூர் ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, குழந்தையை சுரேஷ் கடத்தியது உறுதி செய்யப்பட்டது. அவரது அலைபேசி எண்ணை வைத்து இணையவழி மூலமாக தேடியபோது, பெருந்துறை தாண்டி சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சேலம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து, திருப்பூர் ஊரக காவல் துறையினரும் சேலம் புறப்பட்டுச் சென்றனர்.
இரவு நேரம் சேலம் பேருந்து நிலையத்துக்குள் பேருந்து நுழையும்போது, சுரேஷை காவல் துறையினர் கைது செய்து, குழந்தையை மீட்டனர். இருவரையும் திருப்பூர் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். துரிதமாக செயல்பட்ட காவல் துறையினரை, திருப்பூர் மாநகர காவல் ஆணையர் க.கார்த்திகேயன் நேரில் அழைத்து பாராட்டினார்.