சென்னையில் ஜனவரி 1ஆம் தேதி முதல் சொத்து வரியுடன் சேர்த்து குப்பைக்கான வரியையும் செலுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டினால், 2,000 முதல் 5,000 வரையிலும், குப்பைகளை எரித்தால் 500 முதல் 2,000 வரையிலும் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் நாள்தோறும் சராசரியாக 5,000 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. திடக்கழிவு மேலாண்மை விதிகளை முழுமையாக செயல்படுத்தும் விதமாக பணியாளர்கள் மூலம் வீடு, வீடாக சென்று குப்பைகள் பெறப்பட்டு, அவை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
தினசரியும் சேகரிக்கப்படும் குப்பைகளின் ஈரக் கழிவுகளிலிருந்து இயற்கை உரம் மற்றும் உயிரி எரிவாயு தயாரிக்கப்பட்டு வருகிறது. உலர்கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டு, மறுஉபயோகம் மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்டு வருகிறது. எஞ்சியுள்ள குப்பைகள் தற்போது பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சியில், திடக்கழிவு மேலாண்மை விதிகளில் திருத்தம் செய்து கடந்த பிப்ரவரி மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, வீடுகளுக்கு 10 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையும், திருமண மண்டபங்களுக்கு 1000 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரையும், உணவு கூடங்களுக்கு 300 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரையும், அலுவலகங்களுக்கு 300 ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரையும், கடைகளுக்கு 200 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரையும், விழாக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரையும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இதனைபோல், மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள், திரையரங்குகளுக்கும் தனித்தனியே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் இந்த கட்டண வசூல் அமல்படுத்தப்படாமல் இருந்த நிலையில் ஜனவரி 1ம் தேதி முதல் இந்த கட்டணத்தை சொத்து வரியுடன் சேர்த்து செலுத்த வேண்டுமென சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
மேற்குறிப்பிட்ட கட்டணங்களையும், விதிகளையும் மீறினால் அதற்காக தனியாக அபராதம் விதிக்கவும் முடிவு செய்துள்ளனர். வீதிகளை மீறும் குற்றமாக பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டினால், 2,000 முதல் 5,000 வரையிலும், குப்பைகளை எரித்தால் 500 முதல் 2,000 வரையிலும் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.