கோவில்பட்டி, தமிழகத்தில் இதுவரை என்ன தவறு நடந்துள்ளது; எங்கு நடந்திருக்கிறது என்று ஆதாரத்துடன் கமல் கூறவேண்டும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவுறுத்தியுள்ளார்.தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வான உடற்கல்வி ஆசிரியர்களில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 7 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி கோவில்பட்டியில் நடந்தது. இதற்குத் தலைமை வகித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘நடிகர் கமலஹாசன், தமிழக ஆட்சியில் இதுவரை என்ன தவறு நடந்துள்ளது. எங்கு நடந்திருக்கிறது என்று ஆதாரத்துடன் கூறினால் நன்றாக இருக்கும். பொத்தாம் பொதுவாக பேசினால் சரியாக இருக்காது. சினிமாவில் அப்படி பேசினால் சரியாக இருக்கும். அரசியல் கட்சி தலைவர் என்ற முறையில் பேச வேண்டும். சுமார் 7 மாதங்களுக்கு பின்னர் திரையரங்குகள் திறக்கப்பட உள்ளது. அரசு வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாடுகளை திரையரங்குகளில் கடைப்பிடிக்கப்படும் என உரிமையாளர்கள் உத்தரவாதம் வழங்கி உள்ளனர்.
திரையரங்குகளை கண்காணிக்க அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம் என திரையரங்கு உரிமையாளர்களே தெரிவித்துள்ளனர். எனவே, அவர்களும் அதை மீற மாட்டார்கள். அரசும் முறையாகக் கண்காணிக்கும்’’ என்றார்.