ஒரு காலத்தில் விண்வெளி ஆராய்ச்சி என்பது பெரும் மலைப்பாக பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது ரஷ்யா, சீனா, ஜப்பான், அமெரிக்கா புதிதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எனப் பல நாடுகள் போட்டிப் போட்டுக்கொண்டு விண்வெளி ஆய்வில் புது முயற்சியை மேற்கொண்டு வருகின்றன. இதற்கு நடுவில் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனம் ஒன்று ஒரு ராக்கெட்டில் வைத்து 60 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் பறக்க விட்டு இருக்கிறது.
அமெரிக்காவை சேர்ந்த தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான spaceX நாசாவுடன் இணைந்து சமீபதில் விலை குறைந்த விண்கலத்தை வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பியது. இந்தச் சாதனை உலம் முழுவதும் பெரும் வியப்பாக பார்க்கப்பட்டது. இதற்கு முன்னதாக இந்நிறுவனம் செவ்வாய் கிரகத்தைப் பற்றிய ஆராய்ச்சிக்காக 2 செயற்கைக்கோள்களை மிக வெற்றிகரமாக அனுப்பி வைத்தது.
இப்படி அடுக்கடுக்கான வெற்றி படிகளில் பயணித்து வரும் இந்நிறுவனம் உலகின் அதிவேக இணைய சேவையை வழங்க வேண்டும் என்பதற்காக தற்போது பல புதிய செயற்கைக் கோள்களை விண்வெளிக்கு அனுப்பி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறது. இணைய சேவையில் புது புரட்சி செய்ய நினைக்கும் அந்நிறுவனம் star link எனப்படும் தனது புதிய செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. அதற்காக 1,440 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியாக வேண்டும் என்றும் இத்திட்டத்திற்காக இதுவரை 15 முறை பல செய்ற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி இருக்கிறது.
தற்போது 16 ஆவது முறையாக கேப் கேனவெரல் எனம் விண்வெளி விமான நிலையத்தில் இருந்து பால்கன்9 எனும் ராக்கெட்டில் வைத்து 60 செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக விண்ணிற்கு அனுப்பி இருக்கிறது. இதையும் சேர்ந்து star link திட்டத்திற்கு இதுவரை 955 செயற்கைக் கோள்கள் வெற்றிகரமாக விண்ணிற்கு அனுப்பப்பட்டு அது வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் சுற்றி வருகிறது என்றும் தகவல் கூறப்படுகிறது.