உலகம்

எந்த ஆர்ப்பாட்டம் இல்லாமல் கொரோனா வைரஸை வென்ற ஜப்பான்: எப்படி?

டோக்கியோ: கொரோனாவை எதிர்த்து உலக நாடுகள் பலப்பல யுக்திகளுடன் தலைகீழாக நின்னு தண்ணி குடித்தபாடாக போராடிக் கொண்டிருக்கும் நிலையில், எதையுமே செய்யாமல், கண்ணுக்கு தெரியாத அந்த வைரசை வென்றிருக்கிறது ஜப்பான். இன்று முதல் ஊரடங்கு உள்ளிட்ட இத்தியாதிகளை மூட்டை கட்டிவிட்டு, ஜப்பானியர்கள் மீண்டும் வழக்கம்போல் சுறுசுறுப்பாக தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகின்றனர். ஜப்பானில் முதல் கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஜனவரி 16ம் தேதி உறுதி செய்யப்பட்டது. ஆரம்பத்தில் நோய் தொற்று பரவல் இல்லை என்றாலும், மார்ச் மாதம் வேகமெடுக்கத் தொடங்கியது. மார்ச் 4ம் தேதி 1000 ஆக இருந்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அடுத்த சில நாட்களில் எகிற ஆரம்பித்தது. தலைநகர் டோக்கியோ நோய் தொற்றின் மையமாக மாறியது. இதனால் அங்கு நடக்க இருந்த ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டன. ஏப்ரல் மாதத்தில் பலி எண்ணிக்கையும் அதிகரித்தது.

ஏப்ரல் 7ம் தேதி நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. ஏப்ரல் 16ம் தேதி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,000 ஆக அதிகரித்தது. இறப்பு 500ஐ தாண்டியது. இதனால் ஊரடங்கு மே 31 வரை நீட்டிக்கப்பட்டது. இதெல்லாமே, இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும்ம் நடந்த வழக்கமான பாதிப்புகள்தான். ஒரே ஒரு வித்தியாசம், மற்ற நாடுகளில் நோய் பரவல் படிப்படியாக அதிகரித்தது. ஆனால், ஜப்பானில் மட்டும் படிப்படியாக சரிந்தது. ஜப்பானில் 16,550 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 820 பேர் பலியாகி உள்ளனர். இதில் 13,413 பேர் குணமாகி விட்டனர். புதிதாக நோய் தொற்று ஏற்பட்டோர் எண்ணிக்கை வெறும் 12 ஆக சரிந்து விட்டது. புதிதாக வைரஸ் பாதிப்போர் எண்ணிக்கை கட்டுக்குள் வந்து விட்டதால் அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே, தேசிய ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வந்து விட்டார். சுறுசுறுப்புக்கு பேர் போன ஜப்பானியர்கள் இன்று முதல் மீண்டும் சுறுசுறுப்பாக செயல்பட உள்ளனர். ஏற்கனவே 39 மாகாணங்களில் ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில் எஞ்சிய 4 மாகாணங்களும் இன்று முதல் இயல்பு நிலைக்கு திரும்புகிறது.

கொரோனாவை ஜப்பான் வென்றுவிட்டது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், கொரோனாவை எதிர்க்க உலக நாடுகள் கடைபிடிக்கும் எதையுமே ஜப்பான் செய்யவில்லை. ஊரடங்கில் எந்த கெடுபிடியும் விதிக்கவில்லை. ரெஸ்டாரன்ட் முதல் பார்பர் ஷாப்கள் வரை அனைத்தும் வழக்கம்போல் திறந்தே இருந்தன. நோய் பரவலை கண்காணிக்க எந்த ஆப்-ஐயும் பயன்படுத்தவில்லை. மற்ற நாடுகளைபோல ‘டெஸ்ட், டெஸ்ட், டெஸ்ட்’ என கூவவில்லை.அதன் மொத்த மக்கள் தொகையில் 0.2% பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்துள்ளது. ஜப்பானில் நோய் தடுப்பு மையம் அமைக்கப்படவில்லை. பொதுமக்கள் யாரும் வீடுகளுக்குள் வலுக்கட்டாயமாக அடைக்கப்படவில்லை.

இப்படி, மற்ற நாடுகள் செய்த பாதுகாப்பு நடவடிக்கைகளை உதாசீனப்படுத்திய ஜப்பான் எப்படி கொரோனாவை வென்றது என்பது தான் உலக அளவில் பேச்சு பொருளாகி உள்ளது. ஆனால் எந்த வல்லுநர்களாலும் அதற்கான குறிப்பிட்ட எந்த காரணத்தையும் கண்டறிய முடியவில்லை. மக்கள் மாஸ்க் அணிந்தனர், சமூக இடைவெளியை கடைபிடித்தனர், சுகாதாரத்தை பேணினர் என்பதை தாண்டி ஸ்பெஷலான வேறெந்த காரணியும் இல்லை என்பதுதான் ஆச்சரியம். இதுகுறித்து ஜப்பான் மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகையில், ”பொதுவாக ஜப்பானியர்கள் சுகாதாரத்தை பராமரிப்பவர்கள். ஜப்பானியர்கள் உடல் பருமன் குறைந்தவர்கள். மருத்துவ கட்டமைப்புகளும் சிறப்பாக உள்ளன. மக்களுக்கு புதுவகை காய்ச்சல், காசநோய் போன்றவற்றை கண்டறிய 50,000 நர்ஸ்கள் கொண்ட குழு 2 ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தப்பட்டது. அவர்கள் பல்வேறு பகுதிகளில் தொடர் கண்காணிப்பில் இருந்தனர். மிகுந்த அனுபவமிக்கவர்களான அவர்கள் கொரோனாவை கட்டுப்படுத்தியதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்” என்கின்றனர்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.