ஆர்க்டிக் பகுதியில் ஓசோன் படலத்தில் ஏற்பட்ட பிரம்மாண்ட ஓட்டை மூடப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.பூமியை பாதுகாக்கும் படலமாக ஓசோன் திகழ்கிறது. சூரியனில் இருந்து வரும் புற ஊதாக்கதிர்களை தடுத்து நிறுத்தி மனிதர்கள் மீது படாமல் பார்த்துக் கொள்கிறது. இது தோல் புற்றுநோய் ஏற்படுத்தும் அளவிற்கு ஆபத்தானது. இந்நிலையில் பூமியில் உருவாகும் அதிகப்படியாக மாசுபாட்டால் ஓசோன் படலம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. ஆங்காங்கே ஓட்டைகள் விழுவதால் புற ஊதாக்கதிர்களால் மனிதர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படுகிறது. இதையொட்டி சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்க பல்வேறு நாடுகளும் கட்டுப்பாடுகளை விதித்து செயல்படுத்தி வருகின்றன.
ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சியால் மாசுபாடுகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் மனித உயிர்களை கொத்துக் கொத்தாக கொன்று குவித்து வரும் கொரோனா மறுபுறம் மிகப்பெரும் நன்மையை அளித்துள்ளது.அதாவது கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் வகையில் உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் வீடுகளில் முடங்கி இருக்கின்றனர். பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீடுகளில் இருந்தே பணியாற்ற அறிவுறுத்தி உள்ளனர்.
பல்வேறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. சாலைகளில் வாகனப் போக்குவரத்து முற்றிலும் குறைந்துள்ளது. இதனால் சுற்றுச்சூழல் மாசுபாடு பெரிதும் குறைந்திருக்கிறது. கடந்த மார்ச் மாதம் வட துருவத்தில் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்திருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.
இது வரலாறு காணாத அளவு மிகப்பெரிய ஓட்டை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஓட்டை பெரிதாகி தெற்கு நோக்கி நகரும் பட்சத்தில் மனிதர்களுக்கு பேராபத்தாக மாறக்கூடும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி ஆர்க்டிக் பகுதியில் உள்ள பிரம்மாண்ட ஓசோன் படலத்தின் ஓட்டை மூடப்பட்டிருப்பதாக ஐரோப்பிய செயற்கைக்கோளான கோபர்நிகஸ் உறுதிப்படுத்தியுள்ளது.கடந்த 2011ஆம் ஆண்டு முதல்முறையாக வட துருவத்தில் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்திருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் இது மிகவும் சிறிய அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.