இலங்கையில் நாளை தேர்தல்
இலங்கை அதிபராக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொறுப்பேற்ற கோத்தபய ராஜபக்ச, கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார். பதவிக்காலத்தில் 6 மாதங்கள் எஞ்சியிருந்த நிலையில் 8வது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. ஏப்ரல் 25-ம் தேதி தேர்தல் நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டு, கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் ஜூன் 20-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, பின்னர் ஆகஸ்ட 5-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தேர்தலுக்கான விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டன. பரப்புரைக் கூட்டங்களில் 100 பேருக்கு மேல் பங்கேற்கக்கூடாது, முகக்கவசம், தனிமனித இடைவெளி ஆகியவை கட்டாயம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. வெளிநாட்டு பார்வையாளர்கள் அழைக்கப்படாமல் இலங்கை நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. வாக்குச்சாவடிகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், விதிமுறைகளை பின்பற்றி வாக்காளர்கள் கொரோனா அச்சமின்றி வாக்களிக்கலாம் என்றும் இலங்கை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இலங்கை பிரதமர் யார் என்பதை தேர்வு செய்வதற்கான இந்த தேர்தலில் ராஜபக்ச சகோதரர்களின் பொதுஜன பெரமுன கட்சியும், ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்து சென்ற சஜித் பிரேமதசாவின் ஐக்கிய மக்கள் தேசிய கட்சியும், மைத்ரிபாலாவின் சுதந்திர கட்சியும் களத்தில் உள்ளன. 2015-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 16 இடங்களில் வெற்றி பெற்ற தமிழ் தேசிய கூட்டணி தற்போது 29 இடங்களில் போட்டியிடுகிறது. மும்முனைப்போட்டி நிலவும் தேர்தல் களத்தில் அறுதிப்பெரும்பான்மையை பெற்று விட ராஜபக்ச சகோதரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். மொத்தம் 225 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 29 இடங்கள் கட்சிகளின் பலத்துக்கேற்ப ஒதுக்கப்படும்.
எஞ்சியுள்ள 196 இடங்களுக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கவே தேர்தல் நடத்தப்படுகிறது. 7,452 பேர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். ஒரு கோடியே 62 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ள நிலையில், 12,984 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலில் பதிவான வாக்குகள் ஆகஸ்ட் 6-ம் தேதி எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.