இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம்!! அமைச்சர் விஜயபாஸ்கர்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் ; சென்னையில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் படுக்கை வசதிகளையும் அதிகப்படுத்தி வருகிறோம்.
இன்றைக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு மட்டும் 2,000 செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 6 மாத காலத்திற்கு தற்காலிகப் பணியில் இருப்பார்கள்.
தமிழகத்தை பொறுத்தவரை செவிலியர்கள் பற்றாக்குறை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 6 லட்சத்து 40 ஆயிரம் கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளோம். மகாராஷ்டிராவில் 5 லட்சத்து 90 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளனர்.
ராஜஸ்தானில் 5.4 லட்சம் பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளனர். ஆந்திராவில் 5 லட்சம், கர்நாடகா, உத்தரப் பிரதேச மாநிலங்களில் 4 லட்சம், மேற்கு வங்கத்தில் 3 லட்சம் பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளனர்.
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பரிசோதனைகளை அதிகரிப்பதன் மூலம் நோய்த்தடுப்பை தீவிரப்படுத்த முடியும் என்றார்.