வழிதவறி எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் சகோதரிகளை பத்திரமாய் மீட்ட பரிசுகள் வழங்கி திருப்பி அனுப்பிய இந்திய ராணுவத்தினருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை பகுதியில் நேற்று அதிகாலை இரண்டு சிறுமிகள் நடந்து வருவதை இந்திய ராணுவத்தினர் பார்த்து அவர்களை மீட்டனர். அவர்களிடம் விசாரித்த போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கஹீதா பகுதியை சேர்ந்த சகோதரிகளான லய்பா சபைர் (17), சனா சபைர் (13) என்பதும் வழி தவறி இந்திய பகுதிக்குள் வந்ததும் தெரிந்தது.
இதையடுத்து இந்த தகவலை பாகிஸ்தான் ராணுவத்தினரை தொடர்பு கொண்டு இந்திய ராணு வத்தினர் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் இருவ ரையும் பாகிஸ்தான் ராணு வத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதையடுத்து ‘சாக்கன் தாபாக்’ எல்லை பகுதி வழியாக சகோதரிகள் இருவரையும் பூஞ்ச் பகுதி எல்லை கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் மற்றும் பொது மக்கள் முன்னிலையில் இந்திய ராணுவத்தினர் ஒப்படைத்த னர். அப்போது 2 பேருக்கும் பரிசு பொருட்களை வழங்கி வழி அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சிறுமி லய்பா சபைர் கூறும்போது, ‘‘வழி தவறி பூஞ்ச் எல்லைக்குள் நுழைந்ததுமே எங்களை இந்திய ராணுவ வீரர்கள் பிடித்துவிட்டனர். அதனால் எங்களை அடித்து துன்புறுத்துவார்கள் என நினைத்தோம். ஆனால் இந்திய ராணுவத்தினர் விசாரணைக்கு பிறகு நல்ல உணவுகளையும், பாதுகாப்பாக தங்கும் இடத்தையும் வழங்கினர்.
நாங்கள் விரைவில் வீட்டுக்கு திரும்புவோம் என்று நினைக்கவில்லை. இந்திய ராணுவத்தினர் செயல்பாடுகளால் மகிழ்ச்சி அடைந்தோம்’’ என்றார்.
பாகிஸ்தான் சகோதரிகளை பத்திரமாய் மீட்ட இந்திய ராணுவத்தினர் அனுப்பி வைத்ததற்கு பாராட்டு குவிகிறது.