பெரும்பாலான பெற்றோர் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று தெரிவித்திருப்பதால் இந்த மாதம் 3-வது வாரத்தில் பள்ளிகள் திறப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக பள்ளிக்கல்வி இயக்குனர் எஸ்.கண்ணப்பன் கூறினார்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன.
இதைத்தொடர்ந்து கடந்த கல்வி ஆண்டில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு நடத்தாமலே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி அறிவிக்கப்பட்டது.
12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பெரும்பாலான தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு இருந்ததால் விடுபட்ட தேர்வுகள் மீண்டும் நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
கொரோனா தொற்று பரவல் ஜூன், ஜூலை மாதங்களில் தீவிரமாக இருந்ததால் பள்ளிகளை திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மாணவர்கள் ஆன்லைன் வழியாக பயின்று வருகிறார்கள்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வழியாக பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் வீடுகளில் இருந்து படித்து வருகின்றனர். பாடத்தில் எழும் சந்தேகங்களுக்கு ஆன்லைன் வழியாக விளக்கம் அளிக்கப்படுகின்றன.
கடந்த நவம்பர் மாதம் பள்ளிகளை திறக்க அரசு முயற்சி செய்தது. பெற்றோர் விருப்பத்தை அறிந்து பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்தது.
அதன்படி பெற்றோர்களிடம் கருத்து கேட்டதில் பெரும்பாலான பெற்றோர்கள் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்த பிறகு பள்ளிகளை திறக்க வேண்டும் எனவும், கல்வியை விட மாணவர்களின் நலன்தான் முக்கியம் என்றும் கருத்து தெரிவித்தனர். அதன் அடிப்படையில் அப்போது பள்ளி திறப்பது தள்ளி வைக்கப்பட்டது.
இந்தநிலையில் தனியார் பள்ளி சங்கத்தினர் சார்பில் பள்ளிகளை திறக்க வேண்டும் என தொடர்ந்து அரசுக்கு வலியுறுத்தப்பட்டது. மாணவர்கள் நலன் மட்டுமின்றி லட்சக்கணக்கான ஆசிரியர்கள் குடும்பமும் பாதிக்கப்படுவதால் பள்ளிகளை உடனே திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று தினசரி பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது. உயிர் இழப்பும் குறைந்து வருவதால் சினிமா தியேட்டர்கள், பூங்காக்கள், கடற்கரை மற்றும் பொழுது போக்கும் இடங்கள், சுற்றுலா மையங்கள், அரசியல், மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்துவதில் அரசு தளர்வு செய்தது.
அதனை தொடர்ந்து பள்ளிகளையும் திறக்கலாமா என ஆலோசித்து வருகிறது. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்டு அதன் அடிப்படையில் திறப்பதா? வேண்டாமா? என்று முடிவு செய்ய திட்டமிட்டுள்ளது.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக்குலேஷன், சி.பி.எஸ்.சி. என அனைத்து பள்ளிகளும் 8-ந் தேதிக்குள் பெற்றோர்களிடம் விருப்பத்தை கேட்டறிந்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் எஸ்.கண்ணப்பன் அறிவித்தார்.
அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது. பெற்றோர் வாய்மொழியாகவோ, எழுத்து மூலமாகவோ பள்ளிகளை திறப்பதா? வேண்டாமா? என்று கருத்தினை பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் தமிழகத்தில் 12 ஆயிரம் பள்ளிகளில் படிக்கும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோரிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 17 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.
அந்த வகையில் பெற்றோர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். பெரும்பாலான பள்ளிகளில் எழுத்து மூலமாகவும் பதிவு செய்து ஓட்டு போடுவது போல பெட்டியில் போட்டு சென்றனர்.
ஒரு சில பள்ளிகளில் வாய்மொழியாக பெற்றோர் கூறிய விருப்பத்தை பதிவு செய்தனர். சில பள்ளிகளில் தொலைபேசி வழியாகவும் பெற்றோரிடம் பேசி விருப்பத்தை பதிவு செய்தனர். நேற்று நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் பெரும்பாலான பெற்றோர் பள்ளிகளை திறக்க வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்து இருந்தனர்.
ஒரு சிலர் மட்டும்தான் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்ட பிறகு திறக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.
பொதுத்தேர்வு எழுதும் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவர்கள் கடைசி 3 மாதங்களாவது பள்ளியில் கல்வி கற்க வேண்டும். உரிய சமூக இடைவெளியை பின்பற்றி பாதுகாப்புடன் வகுப்புகளை நடத்த வேண்டும் என்று பெற்றோர் தங்கள் விருப்பத்தை தெரிவித்தனர்.
இன்றும் நாளையும் கருத்துக்கள் கேட்கப்பட்டு மாவட்டம் வாரியாக பள்ளிக் கல்வி இயக்குனருக்கு அனுப்பப்படும்.
அதன்பின்னர் அரசுக்கு அவை சமர்ப்பிக்கப்படும். அதனை தொடர்ந்து பள்ளிகள் திறப்பது குறித்து அரசு முடிவு எடுத்து அறிவிக்கும்.
தற்போதைய சூழலில் பெரும்பாலான பெற்றோர் பள்ளிகளை திறக்க விருப்பம் தெரிவித்து இருப்பதால் பள்ளிகளை திறப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் எஸ்.கண்ணப்பன் கூறியதாவது:-
பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. நேற்று கேட்கப்பட்ட பள்ளிகளில் இருந்து விவரங்கள் இன்று எங்களுக்கு வரும். இன்று கருத்து கேட்கும் பள்ளிகள் முடிவு நாளை வரும். நாளை மாலை வரை விருப்பத்தை தெரிவிக்கலாம்.
இதுவரையில் வந்த தகவலின் அடிப்படையில் 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பள்ளிகள் திறக்கலாம் என பெரும்பாலான பெற்றோர் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.
ஒட்டுமொத்த கருத்துக்களையும் சேகரித்து அதன் சாராம்சத்தை அரசுக்கு நாளை அல்லது நாளை மறுநாள் தெரிவிப்போம்.
முதல்-அமைச்சர் உயர்மட்ட குழுவினருடனும், மருத்துவ குழுவினருடனும் கலந்து பேசி பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிப்பை வெளியிடுவார்.
இந்த மாதம் 3-வது வாரத்தில் பள்ளிகள் திறப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.