ஆன்லைன் வகுப்புகள் – ஓர் அலசல்…
ஊரடங்கால் வீடுகளில் முடங்கியுள்ள மாணவர்களுக்கு கற்பிக்க வீட்டுப்பள்ளி என்ற திட்டத்தை அரசு வகுத்துள்ளது. இதன்படி அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மற்றும் தனியார் தொலைக்காட்சிகளின் உதவியோடு பாடம் சார்ந்த வகுப்புகள் ஒளிபரப்பப்படுகிறது. e-learn.tnschools.gov.in என்கிற பள்ளிக்கல்வித்துறையின் இணையதள பக்கத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 11-ஆம் வகுப்பு வரையிலான பாடங்கள் வீடியோக்களாக பதிவேற்றம் செய்யப்படுகின்றன. 2020 – 2021 கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு பயிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அரசு வழங்கியுள்ள லேப்டாப்களில் பாடங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது.
இவை எல்லாம் அரசுப் பள்ளி மாணவர்கள் முன் உள்ள கல்வி கற்பதற்கான வாய்ப்புகள். தனியார் பள்ளிகளை பொறுத்தவரை பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு ஸ்மார்ட் போன் வாங்கி தர வேண்டும் என்று அறிவுறுத்தி, அதன் வாயிலாக ஆன்லைனில் கற்பிக்கின்றன.
கற்பித்தல் இப்படி நடைபெறும் நிலையில், அரசுப் பள்ளி மாணவர்கள், தனியார் பள்ளி மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் கற்றலில் சில சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது அரசு பள்ளி மாணவர்களை பொறுத்தவரை ஆசிரியர்களுடன் நேரடி தொடர்புக்கே வாய்ப்பில்லை. ஏனென்றால் பெரும்பாலான கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகள் இல்லாததால் அவர்கள் தங்கள் சந்தேகங்களை கேட்டு தெளிய வாய்ப்பு இல்லாது போகிறது. அதிலும் டிவி கூட இல்லாத மலைவாழ் பழங்குடியின மாணவர்களின் நிலையோ மேலும் மோசம்.
இதை எல்லாம் தாண்டி அரசு பள்ளி மாணவர்களானாலும், தனியார் பள்ளி மாணவர்களானாலும் இரு தரப்பினரும் பொதுவாக ஒரு சவாலை எதிர்கொள்கின்றனர். அது பாடங்கள் அனைத்தும் கல்வி தொலைக்காட்சியிலோ, செல்போனிலோ, லேப்டாப்பிலோ தொடர்ந்து கற்கும் போது அவர்கள் எதிர்கொள்ளும் கண் பிரச்னைகள். அதிலும் செல்போனில் பல மணி நேரம் கற்பதென்பது, உடனடியாக பல மாணவர்களுக்கு கண் எரிச்சல், தலைவலி உள்ளிட்ட பிரச்னைகளை கொடுக்கிறது என்பதே நிதர்சனம்.