அறிவுப்போட்டிகளை தமிழில் நடத்தாதது இந்தி திணிப்பே – ராமதாஸ்…
காந்தி பிறந்தநாளில் அறிவுப் போட்டிகளை தமிழில் நடத்தாதது இந்தித் திணிப்பே என்று ராமதாஸ் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்தியாவின் தந்தை மகாத்மா காந்தியடிகளின் 150-ஆவது பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவ, மாணவியருக்கு நடத்தப்படும் அறிவுத்திறன் புதிர்போட்டிகளில் செம்மொழித் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. அனைத்து மொழிகளையும் அரவணைப்பதால் மட்டுமே தேச ஒற்றுமையை வலுப்படுத்த முடியும் என்ற நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
காந்தியடிகளின் 150-ஆவது பிறந்த நாள் அறிவுத்திறன் போட்டிகளை என்.சி.இ.ஆர்.டி எனப்படும் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு நடத்துகிறது. சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகளுக்கு நேரடியாகவும், மாநிலப் பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளுக்கு மாநில அரசுகளின் மூலமாகவும் இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தை கடைபிடிக்கும் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் ஆகியவற்றில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தின் கண்காணிப்பில் இன்று காலை 10.00 மணி முதல் நவம்பர் ஒன்றாம் தேதி நள்ளிரவு வரை ஒரு மாதத்திற்கு இந்தப் போட்டிகள் இணையவழியில் நடத்தப்படுகின்றன. ஆனால், இப்போட்டிகள் ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் மட்டும் தான் நடத்தப் படும்; தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்படாது என்ற அறிவிப்பு தான் ஏமாற்றமளிக்கிறது.
நாடு முழுவதும் அனைத்து நிலை பள்ளி மாணவர்களுக்கும் நடத்தப்படும் அறிவுத்திறன் போட்டிகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை புறக்கணித்து விட்டு ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டும் நடத்துவது திட்டமிட்ட இந்தித் திணிப்பு ஆகும். மூன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு தான் இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கோ, நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கோ இத்தகைய போட்டிகளில் பங்கேற்கும் அளவுக்கு ஆங்கிலப் புலமை இருக்க வாய்ப்பில்லை. இதை கருத்தில் கொண்டு தமிழிலும் இப்போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.
தேசிய அளவிலான பல்வேறு போட்டித் தேர்வுகளும், நுழைவுத் தேர்வுகளும் தமிழ் மொழியிலும் நடத்தப்படுகின்றன. ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட அறிவியல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக ஐஐடி கூட்டு நுழைவுத் தேர்வுகளின் முதன்மைத் தேர்வு வரும் ஜனவரி மாதம் முதல் தமிழ் உள்ளிட்ட 10 மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்தியில் ஆளும் அரசு மாநில மொழி பேசும் மக்களின் உணர்வுகளை மதித்து செயல்பட வேண்டும். மொழி என்பது மிகவும் உணர்ச்சிமயமானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மறைமுகமான வழிகளில் இந்தியைத் திணிக்கும் போக்கை கைவிட்டு, மகாத்மா காந்தியடிகளின் 150-ஆவது ஆண்டு விழா போட்டிகளை தமிழிலும் நடத்துவதற்கு முன்வர வேண்டும். அதுமட்டுமின்றி, மொழிச் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் ஆட்சி மொழியாக்க வேண்டும்; அதற்காக அலுவல் மொழிச் சட்டத்தை திருத்தி அவசர சட்டத்தை பிறப்பிக்க வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.