அமெரிக்கா: கொரோனா பரவலுக்கு இடையே தேர்தலுக்கு தயாராகும் மக்கள்…
அமெரிக்க அதிபரின் பதவிக்காலம் 4 ஆண்டுகள். அந்நாட்டு அரசியல் சாசனத்தின் 24 வது திருத்தத்தின்படி ஒருவர் இரண்டு முறை மட்டுமே அதிபராக முடியும். அதிபரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் வழக்கமாக நவம்பர் மாதம் முதல் செவ்வாய்க்கிழமை நடத்தப்படும். இந்த ஆண்டு நவம்பர் 3 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நவம்பர் மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தேர்தல் நடத்தப்படும் என்பது நிலையான ஒன்று. இந்திய நாடாளுமன்றத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகியவை இருப்பது போல அமெரிக்க நாடாளுமன்றத்திலும் இரு அவைகள் உண்டு. அவை பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை ஆகும். இவை இரண்டும் இணைந்தது காங்கிரஸ் எனப்படும்.
ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பிரதிநிதிகளின் எண்ணிக்கை ஒரு மாநிலத்தின் மக்கள் தொகையால் தீர்மானிக்கப்படுகிறது. தற்போது பிரதிநிதிகள் சபையில் 435 வாக்குரிமையுள்ள மற்றும் 6 வாக்குரிமையற்ற உறுப்பினர்கள் உள்ளனர். பிரதிநிதிகள் சபையின் பதவிக்காலம் 2 ஆண்டுகள். அமெரிக்காவில் 50 மாநிலங்கள் உள்ளன. ஒரு மாநிலத்துக்கு 2 பிரதிநிதிகள் வீதம் மொத்தம் 100 செனட் சபை உறுப்பினர்கள் உள்ளனர். செனட் சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள். இரண்டாண்டுக்கு ஒரு முறை செனட்டின் மூன்றில் ஒரு பகுதி உறுப்பினர்கள் மாறும்விதமாக தேர்தல்கள் நடக்கும்.
பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை ஆகிய இரண்டு அவைகளிலும் உள்ள உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை ஆகியவற்றிற்கான தேர்தல்களும் அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலும் வெவ்வேறானவை. மாநிலங்களில் கட்சி அளவிலான தேர்தல்கள் நடத்தப்பட்டு தங்கள் கட்சியின் அதிபர் வேட்பாளர் யார் என்பதை இரு கட்சிகளும் முடிவு செய்யும். பின்னர் Electoral College உறுப்பினர்களை மக்கள் தேர்வு செய்யும் பொதுத்தேர்தல் நடத்தப்படும். தேர்வு செய்யப்பட்ட Electoral College உறுப்பினர்கள் அதிபரைத் தேர்வு செய்வர்.
தேர்வு செய்வோர் அவை” எனப்படும் Electoral College அமெரிக்க அரசியலமைப்பால் நிறுவப்பட்ட ஒன்று. இது வாக்காளர்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ஒரு அமைப்பாகும். இது அமெரிக்காவின் அதிபரைத் தேர்ந்தெடுக்கும் ஒரே நோக்கத்துக்காக 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உருவாகிறது. ஒவ்வொரு மாநிலமும் அதன் மக்கள் தொகையின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான Electoral College பிரதிநிதித்துவத்தைப் பெறுகின்றன. உதாரணமாக, மிக அதிக மக்கள் தொகையைக் கொண்ட கலிபோர்னியா மாநிலத்துக்கு 55 அவை உறுப்பினர்கள் உண்டு. அதே போல மிகச் சிறிய மாநிலமான வெர்மாண்ட் மாநிலத்துக்கு 3 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.