அதிமுக தலைமையில்தான் கூட்டணி – முதலமைச்சர் பழனிசாமி திட்டவட்டம்.
எந்தத் தேர்தலாக இருந்தாலும், எந்த சமயத்திலும் அதிமுக தலைமையில்தான் கூட்டணி என முதலமைச்சர் பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைந்தது. இந்த நிலையில், அண்மையில் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த வி.பி.துரைசாமி, இனி பாஜக தலைமையில்தான் தமிழகத்தில் கூட்டணி அமையும் என கூறியிருந்தார். மேலும், தமிழகத்தில் ஆறு மாதத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும் என்றும், பாஜக கைகாட்டும் கட்சியே ஆட்சி அமைக்கும் என்றும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.
இதனால், கூட்டணிக்கு யார் தலைமை வகிப்பர் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் மட்டுமின்றி, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட அதிமுகவே கூட்டணிக்கு தலைமை வகித்ததாகவும், இது தொடரும் எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார். யாருடன், யார் தலைமையில் கூட்டணி என்பது குறித்தெல்லாம் கட்சியின் தேசிய தலைமையே முடிவு செய்யும் என பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களுக்கும் மேல் இருக்கும் நிலையில், அதனை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்நிலையில், அதிமுக தலைமையில் தான் கூட்டணி என முதலமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதன் மூலம், கூட்டணி குறித்த பேச்சுக்கள் விரைவில் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.