அதிபர் “ட்ரம்ப்” மக்களை தவறாக வழிநடத்தி செல்லும் வகையில் இருப்பதாக “ட்விட்டர்” நிர்வாகம் தெரிவித்துள்ளது.!
அமெரிக்க அதிபரின் 2 ட்வீட்கள் மக்களை தவறாக வழிநடத்தி செல்லும் வகையில் இருப்பதாக ட்விட்டர் நிர்வாகம் அடையாளப்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி ட்வீட் செய்து தனது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் ட்விட்டர் நிறுவனம், ட்ரம்ப்பின் 2 ட்வீட்களை நம்பகத்தன்மையற்றது என்றும், மக்களை தவறாக வழிநடத்தி செல்லும் வகையில் இருப்பதாகவும் பயனர்களுக்கு தெரிவித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் போலி செய்திகள் பரவுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பலரும் வலியுறுத்தி வந்தனர். ட்விட்டர் நிறுவனம் பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதை கண்டுகொள்வதில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் ட்வீட்டை ‘நம்பகத்தன்மையற்றது’ என நிர்வாகம் அடையாளப்படுத்தியுள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது.தபால் ஓட்டுகளில் பெருமளவு மோசடி நடைபெறும் என ட்ரம்ப் கூறியிருந்தார். அந்த ட்வீட்டின் கீழே, ‘தபால் ஓட்டுகள் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ளுங்கள்’ என தனது பயனர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.மேலும் பிரபல செய்தி நிறுவனங்கள் தபால் ஓட்டுகள் பற்றி வெளியிட்ட செய்திகளையும் பயனர்கள் பார்க்கும் வகையில் இணைத்துள்ளது.
இதுகுறித்து ட்விட்டர் நிர்வாகம் கூறுகையில், ‘அதிபர் ட்ரம்ப்பின் ட்வீட்கள் நிர்வாகத்தின் விதிகளை மீறவில்லை. ஆனால் அவர் கூறிய கருத்து நம்பகத்தன்மையற்றதாக இருந்ததால், பயனர்கள் அதுகுறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என விளக்கமளித்தது.
.@Twitter is now interfering in the 2020 Presidential Election. They are saying my statement on Mail-In Ballots, which will lead to massive corruption and fraud, is incorrect, based on fact-checking by Fake News CNN and the Amazon Washington Post….
— Donald J. Trump (@realDonaldTrump) May 26, 2020
இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள அதிபர் ட்ரம்ப், ட்விட்டர் நிர்வாகம் 2020 அதிபர் தேர்தலில் தலையிடுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். சிஎன்என், வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட போலி செய்தி நிறுவனங்களின் செய்திகளை வைத்து தனது ட்வீட் நம்பகத்தன்மையற்றது என கூறுவதாக தெரிவித்துள்ளார்.