சூரப்பா போன்ற நேர்மையானவர்கள் வேட்டையாடப்பட்டால், நான் சும்மா இருக்க மாட்டேன் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் எச்சரித்துள்ளார்.
அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா மீது 280 கோடி ரூபாய் ஊழல் முறைகேடு புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து அதுதொடர்பாக விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த விசாரணைக்குழு விசாரணையை தொடங்கி உள்ளது.
இந்நிலையில், அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன், தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா மிகவும் நேர்மையானவர் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். வளைந்து கொடுக்காமல் ஊழலுக்கு ஒத்துழைக்க மறுப்பதால், சூரப்பாவின் அடையாளத்தை அழிப்பதா? என்று கேள்வி எழுப்பி உள்ள கமல்ஹாசன், சூரப்பா போன்ற நேர்மையானவர்கள் வேட்டையாடப்பட்டால், நான் சும்மா இருக்க மாட்டேன் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
‘யாரோ அடையாளத்தை மறைத்துக்கொண்டு எழுதிய மொட்டைக் கடிதாசியின் அடிப்படையில் விசாரணைக்குழு அமைத்திருக்கிறார்கள். மொட்டையில் முடி வளராததால், மக்கள் வரிப்பணத்தில் விளம்பரம் கொடுத்து ஏதேனும் வில்லங்கம் சிக்குமா? என்று காத்திருக்கிறார்கள். முறைகேடாக அண்ணா பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்தவர்களையும், பல்கலைக்கழக வாகனங்களை பயன்படுத்தியவர்களையும் விசாரித்திருப்பீர்களா?’ என்றும் கமல் கேள்வி எழுப்பி உள்ளார்.