JEE தேர்வில் 91.73% பெற்ற அரசுப்பள்ளி மாணவர்!!!
திருச்சி மாவட்டத்தில் லால்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சேதுபதி, ஹரிகிருஷ்ணன், மண்ணச்சநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாற்றுத்திறனாளி மாணவி புகழரசி, திருச்சி சையது முர்துசா அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஆயிஷா ஆகியோர் தேர்ச்சி பெற்று NIT-இல் சேரும் வாய்ப்பை பெற்றுள்ளனர். இதில், JEE-இல் 91.73% பெற்று IIT-இல் சேருவதற்கானஅடுத்தகட்ட தேர்விற்கும் (அட்வான்ஸ்) தகுதி பெற்றுள்ளார் சேதுபதி.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஒருங்கிணைப்பில் என்.ஐ.டி இக்னைட் கிளப் மூலம் மாவட்டம் முழுவதும் உள்ள 300 மாணவர்களுக்கு சிறப்பு நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு, 30 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு வார இறுதி நாட்கள் & தேர்வு விடுமுறை காலங்களில் என்.ஐ.டி வளாகத்தில் தங்க வைத்து க்னைட் கிளப் மாணவர்கள் பயிற்சி அளித்தனர். கடந்த ஆண்டு ஆகஸ்டு முதல் மார்ச் வரை என்.ஐ.டியிலும் கொரோனா பொது முடக்கத்தையடுத்து ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்டு வரை ஆன்லைன் வழியிலும் வழிகாட்டினர். திருச்சி மாவட்டத்தில் வசித்தாலும் சிறப்பு பயிற்சிக்கு செல்லும் வரை என்.ஐ.டி என்று ஒன்று இருப்பதே எனக்கு தெரியாது. இப்போது அங்கேயே படிக்க போவது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்கிறார் JEE-இல் 88.42% பெற்றுள்ள மற்றொரு மாணவரான ஹரிகிருஷ்ணன்.
கடந்த சில ஆண்டுகளாக கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்கள் என்.ஐ.டியில் சேரும் வாய்ப்பே இல்லாத நிலையில், புதிய வரலாற்றை தொடங்கியுள்ளனர் இந்த மாணவர்கள். குறிப்பாக மாணவர் பெருவளநல்லூர் சேதுபதியின் தந்தை பழனிச்சாமி கேபிள் டிவி ஆபரட்டரிடம் உதவியாளராக பணியாற்றுகிறார். ஹரிகிருஷ்ணன் தந்தை மளிகைக் கடை வைத்துள்ளார். மாணவிகள் புகழரசி, ஆயிஷா ஆகியோரும் சாதாரண குடும்பத்தினர். கிராமப்புற பின்னணியில் இருந்து இந்திய அளவிலான உயர்கல்வி நிறுவனத்தில் தங்கள் குழந்தைகள் படிக்க செல்வது பெருமிதமாக இருக்கிறது என்கிறார் ஹரிகிருஷ்ணனின் தந்தை செந்தில்குமார்.
தேசிய தொழில்நுட்பக்கழகத்திற்கு செல்லும் வாய்ப்பை உறுதியாக்கியுள்ள இந்த மாணவர்கள் (அடுத்த மாதம் சேர்க்கை கவுன்சிலிங்) மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வையும் எழுதியுள்ளனர். அதிலும் நல்ல மதிப்பெண் கிடைக்கும் என்கிற நம்பிக்கையோடு உள்ளனர். இவர்கள் லால்குடி அரசு மேல்நிலைப்பள்ளி 6-வது முதல் படிக்கிறார்கள். உரிய பயிற்சி கிடைத்தால் அனைத்து அரசு பள்ளி மாணவர்களும் சாதிக்க முடியும் என்பற்கு இவர்கள் உதாரணம் என்கிறார்கள் ஆசிரியர்கள்.மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை, என்.ஐ.டி ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் இந்த சிறப்பு பயிற்சியை அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.