‘EMI கட்டு… இல்லனா டெத் செர்டிபிகேட் கொடு…’ நிதி நிறுவன ஊழியர் நெருக்கடி..
திருச்சியில், டிராக்டருக்கான கடன் தொகையைக் கட்ட முடியாவிட்டால், உனது இறப்புச் சான்றிதழையாவது கொடு அதை வைத்து கடனை முடித்து விடுகிறோம் என தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மிரட்டுவதாக பாதிக்கப்பட்டவர் போலீசாரிடம் புகாரளித்துள்ளார். திருச்சி மாவட்டம் சிறுகாம்பூர் அடுத்த குருவம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம்; திருமணம் ஆகாத முருகானந்தம் தாயுடன் வசித்து வருகிறார். திருச்சி தில்லை நகரில் உள்ள தனியார் நிதி நிறுவனம் மூலம் கடனில் டிராக்டர் வாங்கியுள்ளார்.
3 மாதங்களுக்கு ஒருமுறை 31,500 ரூபாய் அவர் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் டிராக்டர் வழங்கப்பட்டது. 3 தவணைகளாக 9 ஆயிரம் ரூபாய் செலுத்திய நிலையில் கொரோனா ஊரடங்கால் வேலையின்றி வீட்டில் முடங்கினார் முருகானந்தம். அதேநேரம் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள், முருகானந்தம் வீட்டிற்கு சென்று தவணையை செலுத்தும்படி நெருக்கடி கொடுத்துள்ளனர். நெருக்கடி முற்றியதால், ஏற்கனவே உடல்நிலை பாதிக்கப்பட்ட தனது தாயாரை உறவினர் வீட்டிற்கு அனுப்பி விட்டார் முருகானந்தம். இதற்கிடையே, தவணை வசூலிக்கும் நபர் முருகானந்தத்திற்கு வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அதில், பணத்தைக் கட்டு இல்லை என்றால், நீ செத்து விட்டதாக சான்றிதழையாவது வாங்கிக் கொடு; அதை வைத்து லோனை முடித்து விடுகிறேன் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த முருகானந்தம், வாத்தலை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
முருகனாந்தத்தின் புகார் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணையில்தான் யார் கூறுவது உண்மை என தெரிய வரும். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு, திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே தனியார் நிதி நிறுவுனத்தில் கடன் மூலம் லாரி வாங்கிய ஒட்டுநர் ஒருவர் இதே போல நெருக்கடியை எதிர்கொண்டார். அவரது மனைவியிடம், நிதி நிறுவன ஊழியர்கள் தகாத வார்த்தைகள் பேசியதால், தனது சாவுக்கு அந்த நிதி நிறுவனம் தான் காரணம் என வீடியோ பதிவிட்டு விட்டு தற்கொலை செய்து கொண்டார். தனியார் நிதி நிறுவனங்களில் வாங்கிய கடன்களை செலுத்துவது தொடர்பாக அரசு தெளிவான வழிகாட்டல்களை அறிவித்தால்தான் இதுபோன்ற பிரச்னைகள் தற்காலிகமாகவது குறையும் என்கின்றனர் பாதிக்கப்பட்டவர்கள்.