வங்கக்கடலில் நிலைபெற்றிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு புயலாக வலுப்பெற்றது. இந்தப் புயலுக்கு ஆம்பன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. புயல் மேலும் வலுவடைந்து வடக்கு நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. வரும் 20ஆம் தேதி அது மேற்கு வங்கம் அல்லது ஒடிசா மாநில எல்லையில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
புயலின் நேரடி தாக்கத்தால் தமிழகம், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு மழை இருக்காது என்றாலும், அரபிக் கடலிலிருந்து ஈரப்பதம் உள்ள காற்றை இந்த புயல் சின்னம் இழுக்கும் போது, அதன் தாக்கத்தால், கடலோர கர்நாடகா மற்றும் கேரள பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில்தான், இன்று இரவு, ராமநகரம், மண்டியா, பெங்களூரு ஊரகம் மற்றும் பெங்களூரு நகர் உள்ளிட்ட தெற்கு கர்நாடக மாவட்டங்களில் இடியுடன் கூடிய நல்ல மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக கடும் வெப்பத்தால் அவதிப்பட்டு பெங்களூர் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக வெப்பத்தின் அளவு பெங்களூர் நகரில் அதிகரித்தபடி இருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை, நேற்றைய நிலவரப்படி 24 டிகிரி செல்சியசாக இருந்தது. இது வழக்கத்தைவிட மிக அதிகம் என்பதால் மக்கள் கடும் புழுக்கத்தில் சிக்கி தவித்தனர்.
இந்த நிலையில்தான் இரவு பெய்து வரும் இந்த மழை காரணமாக வெப்பம் குறைந்து குளுமையான காற்று வீசி வருகிறது. இடியுடன் மழை பெய்து வருவதால், நகரின் சில பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இந்த மழையின் தாக்கம், கிருஷ்ணகிரி மாவட்டம், தருமபுரி, சேலம் மற்றும் ஈரோடு போன்ற மாவட்டங்களிலும் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.