தகவல்கள்

அனைவரது வாழ்விலும் ஒற்றுமை, அமைதி நிலவட்டும்… தலைவர்கள் ரம்ஜான் வாழ்த்து…!

அனைவரது வாழ்விலும் ஒற்றுமை, அமைதி நிலவட்டும், மகிழ்ச்சி தழைக்கட்டும் என்று ஆளுநர், முதல்வர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: இந்தப் புனித ரமலான் ஒவ்வொருவருக்கும் இடையே நட்பு, சகோதரத்துவம், பரஸ்பரம் மரியாதை ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. ஈகைப் பெருநாள் அனைவரது வாழ்க்கையிலும் அமைதியையும், ஒற்றுமையையும் ஏற்படுத்த வாழ்த்துகிறேன்.

முதல்வர் பழனிசாமி: இறை அருளைப்பெறுவதற்காக புனித ரமலான் மாதத்தில்இஸ்லாமியப் பெருமக்கள் நோன்பிருந்து உடலையும், உள்ளத்தையும் தூய்மைப்படுத்தி எல்லோரிடத்தும் அன்பு பாராட்டி, ஏழை மக்களுக்கு உணவளித்து வாழ்வில் அனைத்து நலன்களையும், வளங்களையும் பெற்று வாழ வேண்டும். இப்புனித ரம்ஜான் பெருநாளில் உலகில் அமைதி நிலவட்டும், அன்பு தழைக்கட்டும், மகிழ்ச்சி பெருகட்டும்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி: இறைத்தூதர் நபிகள் நாயகத்தின்போதனைகளான ஈகை, கருணை, அன்பு,மனிதநேயம், சினம் தவிர்ப்பு ஆகியவற்றைக் கடைபிடித்து உலகில் அமைதியும், சமாதானமும் தழைக்க உறுதியேற்போம்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: கரோனா நெருக்கடியிலும் தங்களை வருத்திக் கொண்டு நோன்பைக் கடைபிடித்தனர் இஸ்லாமிய சமுதாயத்தினர். ஒப்பற்ற இச்சமுதாயத்தின் வாழ்க்கைத் தரமும், நல்வாழ்வும் மேலும் உயர்ந்து சமூக நல்லிணக்கம், சகோதரத்துவம் தழைக்க இஸ்லாமியர்கள் அனைவருக்கும் திமுக தனது ரமலான்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: கரோனா தொற்றால் மனித சமுதாயமே கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. ஒருபக்கம் கரோனாவை எதிர்த்தும், மறுபக்கம் பொருளாதார பேரழிவில் இருந்து மீள்வதற்கும் போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த இன்னலில் இருந்து மீள்வதற்கு நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: கரோனாவால் இந்தியா உட்பட உலகமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ரம்ஜான் பண்டிகையை அனைத்து மக்களின் நலன் கருதி வீட்டில் பாதுகாப்பாக, எளிமையாகக் கொண்டாடும் இஸ்லாமியர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்: இந்த இனிய நாளில் அன்பு ஓங்க, அறம் தழைக்க, சமாதானம் நிலவ, சகோதரத்துவம் வளர வேண்டுமென வாழ்த்துகிறேன்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: மற்ற மதங்களைப் போலவே இஸ்லாமும் நன்மைகளை மட்டுமே போதிக்கிறது. அமைதியையும், ஈகையையும் வலியுறுத்துகிறது. இதை உணர்ந்து மக்களிடையே நல்லிணக்கமும், சகிப்புத் தன்மையும், சகோதரத்துவமும் பெருகி மகிழ்ச்சியாக வாழ உறுதியேற்போம்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: இந்த இனிய நன்னாளில் சமத்துவம் தழைக்கவும், சகோதரத்துவம் நிலைக்கவும், சமய நல்லிணக்கம் ஓங்கவும், சமூக ஒற்றுமை மேம்படவும் உறுதி கொள்வோம்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் வளர்த்தெடுத்து மனிதநேயத்தை செம்மைப்படுத்த இந்த இனிய ரமலான் பெருநாளில் உறுதி ஏற்போம்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: இறைதூதர் நபிகள் நாயகம் போதித்த மனித நேயம், ஈகை, கோபம் தவிர்த்தல் உள்ளிட்ட உயர் பண்புகளின் வழியாக தலைசிறந்த மனித சமுதாயத்தை உருவாக்க புனித ரமலானில் உறுதி ஏற்போம்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன்: ரம்ஜான் நாளில் இறைவனை வணங்கி, இல்லாத எளியோருக்கு வழங்கி, எல்லா மக்களுடன் இணங்கி வாழ்ந்துள்ளோம். இத்தகைய மெத்தகு வாழ்வியல் இனி வருங்காலத்திலும் தொடர இறையருள் துணை நிற்க வேண்டும். மானிட சமுதாயத்தை நிலைகுலையச் செய்துவரும் கரோனா தொற்று விரைவில் விலகிடவும், நாட்டு மக்கள் மனநிம்மதியுடனும், அமைதியுடனும், நலமுடன் வாழவும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா: கரோனா என்ற கொடிய அரக்கனால் இன்று உலகமே ஸ்தம்பித்து நிற்கிறது. உலகைச் சூழ்ந்துள்ள இந்தக் கரோனா எனும் இருளை விரட்டி ஒளிபெறச் செய்வோம் என இப் பெருநாளில் சூளுரைப்போம்.

இந்திய ஜனநாயக கட்சி நிறுவன தலைவர் பாரிவேந்தர்: புனித ரமலான் மாதத்தில் மனிதநேயத்துடன் ஏழை, எளிய மக்களுக்கு பொருள் உதவி செய்ய வேண்டும் என நபிகள் நாயகம் மனிதகுலத்துக்கு வழங்கிய இத்தகைய நற்கருத்துகளை இந்த ரமலான் திருநாளில் நினைவில் கொள்வோம்.இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இதேபோல், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன், திருச்சி தொகுதி எம்பி சு.திருநாவுக்கரசர், மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவன தலைவர் ந.சேதுராமன், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், எஸ்டிபிஐ கட்சி மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் உள்ளிட்டோரும் ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.