A.R. ரஹ்மான் தெரிவித்த கருத்திற்கு வலுசேர்க்கும் வண்ணம்.
2009ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று அந்த மேடையிலேயே எல்லா புகழும் இறைவனுக்கே என தமிழில் முழங்கிய ஏ ஆர் ரகுமான், அதன் பின்னர் பாலிவுட் திரையுலகில் அதிக அளவிலான திரைப்படங்களுக்கு இசை அமைக்கவில்லை, இது குறித்து அண்மையில் மனம் திறந்த ரகுமான் தான் பாலிவுட்டில் அதிக திரைப்படங்களில் பணியாற்றக் கூடாது என ஒரு குழு தனியாக இயங்கி வருவதாக குற்றம் சாட்டி இருந்தார்.
இதே குற்றச்சாட்டை ரஹ்மானுடன் ஆஸ்கர் விருது வென்ற கேரளாவை சேர்ந்த சிறப்பு ஒலி பொறியாளர் ரசூல் பூக்குட்டியும் ஆமோதித்தார். இதைத்தொடர்ந்து ரகுமானுக்கு ஆதரவாக தமிழ் சினிமாவில் பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவின் அடையாளமாக இருக்கும் ரஹ்மானுக்கு எதிராக செயல்படுபவர்கள் கண்டனத்திற்கு உரியவர்கள் என பதிவு செய்துள்ளார்.
இதே போன்ற சிக்கல்களை இளையராஜா, பாரதிராஜா, கமலஹாசன் போன்றவர்களும் சந்தித்துள்ளதாக இசையமைப்பாளர் கங்கை அமரன் கூறியுள்ளார். தமிழர்களின் அறிவுக்கூர்மையும் வேலைபார்க்கும் வேகமும் பாலிவுட் திரையுலகிற்கு அச்சத்தை ஏற்படுத்துவதாலேயே தொடர்ந்து தென்னிந்தியர்களை பாலிவுட் சினிமா புறக்கணித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.கடவுளின் அருட்கொடையாக கொண்டாடப்படவேண்டிய ஏ ஆர் ரகுமானை ஒதுக்குவது பாலிவுட் திரையுலகிற்கு தான் இழப்பேத் தவிர, ரகுமானுக்கு அல்ல என பாலிவுட்டின் முன்னணி ஒளிப்பதிவாளரான நட்டி குறிப்பிட்டுள்ளார்.பாலிவுட்டில் பல படங்களை இயக்கிய தமிழின் முன்னணி இயக்குனர் கே பாக்யராஜ், இதேபோல கசப்பான அனுபவங்கள் தனக்கும் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் கமலஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் ஹிந்தி திரையுலகில் புறக்கணிக்கப்பட்டதற்கு பாலிவுட் திரையுலகம் திட்டமிட்டு செயல்படுவதே முக்கிய காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.
ஒட்டுமொத்த இந்தியாவிற்கான திரையுலகமாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் பாலிவுட் சினிமா ஹிந்தி பேசும் மாநிலங்களில் இருந்து வரும் கலைஞர்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து வருவது பிற மொழி கலைஞர்களை கடும் நெருக்கடிக்கு ஆளாகி வருகிறது. திறமை இருந்தாலும் ஹிந்தி பேசாத கலைஞர்களுக்கெதிரான புறக்கணிப்பு என்பதை பாலிவுட் சினிமா ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருகிறது என்பது வேதனையிலும் வேதனை