ஆஸ்திரேலிய வரலாற்றுச் சாதனையில் இந்தியக் கேப்டன் செய்த ஒரு அசத்தல் காரியம்… குவியும் பாராட்டு!
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி அங்கு ஒருநாள் போட்டி, டி20 போட்டி, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்டது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி அதன்பிறகு நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி பதிலடி கொடுத்தது. பின்பு அடிலெய்ட்டில் தொடங்கிய டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 4 ஆவது ஆட்டம் இன்று பிரிஸ்பனில் முடிவுக்கு வந்தது. 4 தொடர்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மூன்றாவது போட்டி டிராவில் முடிந்த நிலையில் தற்போது 2-1 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிப் பெற்றுள்ளது.
பிரிஸ்பனில் கடந்த 33 ஆண்டுகளாக வேறு எந்த அணியும் ஆஸ்திரேலிய அணியை வெல்ல முடியவில்லை எனும் கருத்து நிலவி வந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஒரு வரலாற்று சாதனையை நிகழ்த்தி உள்ளனர். இதனால் இந்திய அணியின் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் திளைத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் களம் இறக்கப்பட்ட இந்தியக் கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்கள் 6 பேர் காயம் காரணம் மற்றும் சொந்தக் காரணங்களுக்காக விலகினர்.
ஆனால் மூத்த வீரர்கள் இல்லாத நிலையிலும் இளம் வீரர்களை கொண்டு இந்திய கிரிக்கெட் அணி இந்த வரலாற்று சாதனையை நிகழ்த்தி இருக்கிறது. இதனால் ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர். முகமது சிராஜ், தமிழக வீரர் தங்கராசு நடராஜன், நவ்தீப் சைனி, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர் போன்றோர் ஒரிரு போட்டிகளில் கலந்து கொண்டு இருந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு புதியவர்கள். இவர்களைக் கொண்ட இந்திய அணி ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் தொடரை வென்றிருப்பது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த ரஹானே அனைவரும் பாராட்டும் வகையில் ஒரு காரியத்தை செய்தார். இது மேலும் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. போட்டி முடிந்த கையோடு ஆஸ்திரேலிய வீரர் நாதன் லைனுக்கு ரஹானே இந்திய அணியின் டீ ஷர்டை பரிசாக வழங்கினார். காரணம் நாதன் லைனுக்கு இன்றைய போட்டி 100 ஆவது போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டி அவருக்கு வெற்றிகரமாக அமையவில்லை என்றாலும் ரஹானே இந்திய அணியின் ஜெர்ஷியை அவருக்கு வழங்கினார். இச்செயல் ஆஸ்திரேலிய களத்தில் இந்திய வீரர்களின் பெருந்தன்மையை காட்டுவதாக இருந்தது.
மேலும் இந்திய அணியின் வெற்றி குறித்து பேசிய ரஹானே, “இந்த வெற்றியை கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்கவில்லை. இளம் வீரர்கள் எல்லோரும் நன்றாக விளையாடினார்கள். கடைசி வரை போராடினார்கள். இது மிகப்பெரிய சந்தோஷம் அளிக்கிறது. அணிக்காக ஒவ்வொருவரும் களத்தில் நின்றார்கள். இதுதான் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம். ஒவ்வொரு வீரரையும் நினைத்தால் பெருமையாக இருக்கிறது” எனப் பேசி அனைத்து வீரர்களுக்கும் தனது நன்றியையும் அவர் தெரிவித்தார்.