மக்கள் ஆசி இருந்தால் தமிழ்நாட்டின் ரேகையை மாற்றி விடுவேன் என்று அருப்புக்கோட்டையில் நடிகர் கமல்ஹாசன் பேசியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் 3-வது கட்ட பிரசாரத்தை திருச்சியில் தொடங்கி நேற்று இரவு விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் முடித்தார். அருப்புக்கோட்டை தனியார் மண்டபத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:-
எனக்கு கூட்டம் புதிதல்ல, உங்கள் தயவால் புகழும் புதிதல்ல. உங்கள் தயவால் 5 வயதில் இருந்தே புகழை அனுபவித்து வருகிறேன். உங்கள் ஆசி இருந்தால் தமிழ் நாட்டின் ரேகையை மாற்றி விடுவேன். எனது எஞ்சிய வாழ்க்கை உங்களுடன் தான்.
உங்கள் அன்பை உணர்கிறேன், அன்புக்காக கடமைப்பட்டு இருக்கிறேன். தமிழன் தலை நிமிர வேண்டும், நெஞ்சை நிமிர்த்தி ஓட்டு போட வேண்டும். நிறைய பேச வேண்டும் என்று இருக்கிறது. செயலில் இறங்கி காட்டுவோம்.
உங்கள் வாழ்வை தாக்கும் அரசியலில் உங்கள் தாக்கம் இருக்க வேண்டும். நேர்மையை போற்றுங்கள், உங்கள் நாட்டை மாற்றுங்கள், குறிப்பாக தமிழ்நாட்டை மாற்றுங்கள். இந்திய நாடு நம் தமிழகத்தை திரும்பிப் பார்க்க வேண்டும். இந்தியாவின் தலைவாசலாக தமிழகம் மாற வேண்டும்.
இல்லத்தரசிகளுக்கான திட்டம், மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு திட்டம் என பல திட்டங்கள் கொண்டு வரப்படும்.
அருப்புக்கோட்டை தொகுதி பெரிய தலைவர்களை தேர்ந்தெடுத்த தொகுதி. வரும் சட்டமன்ற தேர்தலில் நல்லவரை பார்த்து தேர்ந்தெடுங்கள். நாளை நமதே இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக கமல்ஹாசன் தனது சொந்த ஊரான பரமக்குடியிலும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அரசியலுக்கு வரக்கூறிய எனது தந்தையின் ஆசையை நிறைவேற்றி உள்ளேன் என்றார்.