வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் புராரி மைதானத்திலும், டெல்லியின் எல்லைப்பகுதிகளிலும் விவசாயிகளின் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் எல்லை நெடுஞ்சாலைகளில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்கின்றனர்.
திக்ரியில் உள்ள டெல்லி-அரியானா எல்லையிலும் விவசாயிகள் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர்.
பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி, வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. விவசாயிகளை சமாதானப்படுத்த மத்திய அரசு இதுவரை மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன. இதனால் இன்று விவசாயிகளுடன் மத்திய அரசு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறது.
மத்திய அரசாங்கத்துடன் இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில், உறுதியான முடிவு எடுக்கப்படவில்லை என்றால் பாராளுமன்றத்தை முற்றுகையிடவும் விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.
மேலும் விவசாயிகளின் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்ததற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்த நிலையிலும், கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ, விவசாயிகளின் போராட்டத்திற்கு மீண்டும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியை முற்றுகையிட்டு 10வது நாளாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் இந்தப் போராட்டம் சர்வதேச அளவில்கவனத்தை ஈர்த்தது.
அந்த வகையில், டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ ஆதரவு தெரிவித்தார். இதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்தது. உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டால், இருநாட்டு உறவுகளில் பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை விடுத்தது. மேலும், இது தொடர்பாக இந்தியாவுக்கான கனடா தூதருக்கு சம்மனும் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், மத்திய அரசின் எச்சரிக்கை தொடர்பாக கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோவிடம் அந்நாட்டு செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், ” உரிமைக்காக உலகின் எந்த இடத்திலும் அமைதியாக நடக்கும் போராட்டத்திற்கும், மனித உரிமைக்கும் கனடா துணை நிற்கும்,” என்றார்.
கனடாவின் இந்த செயல் இந்திய அரசுக்கு மேலும் எரிச்சலையூட்டியுள்ளது.