நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவிற்கும் ஒரு வித தன்மை நிச்சயம் இருக்க தான் செய்யும். சில உணவுகள் நீண்ட நாட்கள் கெடாமல் அப்படியே இருக்கும். சில உணவுகள் ஒரு சிலமணி நேரங்களில் கெட்டு போய் விடும். குறிப்பாக தேன் போன்ற உணவுகள் பல ஆண்டுகள் வரை கெடாமல் இருக்கும். ஆனால், நமது வீடுகளில் பயன்படுத்தும் சில அத்தியாவசிய உணவு பொருட்கள் மிக குறைந்த கால கட்டத்திலே கெட்டு போய் விடும்.
இவற்றை நீண்ட காலம் வரை கெடாமல் பார்த்து கொள்ள கண்டுபிடிக்கப்பட்டது தான் பதப்படுத்தும் முறை. அத்துடன் உணவை சரியான முறையில் பேக் செய்தால் அவை கெடாமல் அதிக காலம் வரை இருக்கும். குறிப்பாக பிரட் போன்ற உணவு வகைகளும் இதில் அடங்கும். இதில் ஒரு சந்தேகம் நமக்கு உண்டாக கூடும். பொதுவாக உணவை பாதுகாக்க பிளாஸ்டிக் பைகளை தான் பெரும்பாலும் பயன்படுத்துவோம். ஆனால், பிரட் விஷயத்தில் மட்டும் நாம் இரு வகையான முடிவை கையாளுகின்றோம். இதற்கான உண்மை காரணத்தை அறிந்து கொள்ளவே இந்த பதிவு.
பிரட்
பல வகையான பிரட்கள் இருந்தாலும், பொதுவாக இரண்டு வகையாக தான் இதை கூறுவார்கள். ஒன்று மென்மையான பிரட் வகை. இன்னொன்று சொரசொரப்பான வறண்ட பிரட் வகை. இவை இரண்டிலுமே பல வேறுபாடுகள் உள்ளது. அந்த வேறுபாடுகள் தான் இந்த பிரட்டை இவ்வாறு பதப்படுத்த மூல காரணமாக உள்ளதாம்.
மென்மையான பிரட்
மிகவும் மென்மையான பிரட் வகைகளை சாண்ட்விச், டோஸ்ட், ரோஸ்ட் போன்றவற்றிற்கு நாம் பயன்படுத்துவோம். இதனை பதப்படுத்த பிளாஸ்டிக் வகை celofin பைகளை தேர்ந்தெடுத்து அதில் பேக் செய்வார்கள்.
காரணம்?
அவ்வாறு செய்யும் போது இந்த வகை பிரட் ஈர்ப்பதம் புகாதவாறு பார்த்து கொள்ளப்படும். இந்த வகை பிரட்கள் மிக விரைவிலே கெட்டு போக கூடிய தன்மை வாய்ந்தவை. இதை தடுக்க தான் பிளாஸ்டிக் வகை பைகளை மென்மையான பிரட்களுக்கு உபயோகப்படுத்துகின்றனர். ஆனால், இது இன்னொன்று வகைக்கு முற்றிலும் வேறுபடும்.
மென்மையற்ற பிரட்
இந்த வகை பிரட் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். இதை குழம்புடன் நாம் தொட்டு சாப்பிட பயன்படுத்தி கொள்ளலாம். அத்துடன் பிரியாணி, புலாவ் போன்றவற்றிற்கும் உபயோகம் செய்யலாம். நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும் என்பதால் தான் இதை பேப்பர் பைகளில் வைத்து விற்கின்றனர். அப்போது தான், இவை நீண்ட நாட்கள் மொறுமொறுவென்று, சுவை கொண்டதாக இருக்குமாம்.
ஸ்டார்ச்
எப்போதுமே ஸ்டார்ச் வகை உணவுகளை சற்று கவனமாக பாதுகாக்க வேண்டும். அந்த வகையில் பிரட்களை பதப்படுத்தும் போது அவற்றை அப்படியே வெளியில் வைத்து விட கூடாது. முடிந்த வரையில் ஒரே முறையில் பிரட்டை சாப்பிட்டு விட வேண்டும்.
மீந்து போனவை
பொதுவாக பிரட்கள் மீந்து போனால் அதை அப்படியே வெளியில் வைக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு. ஆனால், அவ்வாறு செய்ய கூடாதாம். இது பிரட்டை மிக விரைவிலே கெட செய்து விடுமாம். இதை கெடாமல் பார்த்து கொள்ள குளிர் சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்தலாம்.