அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பைடன் 290 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் டிரம்ப் 232 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்துள்ளார். ஆனாலும் தனது தோல்வியை ஏற்க அதிபர் டிரம்ப் மறுத்து வருகிறார். மேலும் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஜோ பைடன் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளதாக அதிபர் டிரம்ப் முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் தேர்தல் மோசடியானது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இதுகுறித்து அவர் ட்விட் செய்துள்ளார். அதில், ‘அவர் (ஜோ பைடன்) வெற்றி பெற்றுள்ளார். ஏனென்றால் இந்த தேர்தல் மோசடியானது. வாக்கு எண்ணிக்கையில் கண்காணிப்பாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இடதுசாரி சித்தாந்தம் கொண்ட டொமினியன் என்ற தனியார் நிறுவனத்தின் மூலம் வாக்குகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
நன்மதிப்பற்ற அந்நிறுவனத்தின் மோசமான உபகரணங்களால் டெக்சாசில் கூட தகுதிபெற முடியாது (நான் அதிகவாக்குகளில் வெற்றிபெற்ற இடம்). மேலும் போலி, அமைதியான ஊடகங்கள் மற்றும் இன்னும் சிலவற்றால் பைடன் வெற்றி பெற்றுள்ளார்’ என டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.