பண்டிகை நாட்களில் வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்வது வழக்கம் தான். ஆனால் அதற்காக இப்படியா எனப் பலரும் கேட்கும் அளவிற்குச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
புனேவில் பிம்பிள் சௌதாகர் என்ற பகுதியில் வசித்து வருபவர் ரேகா செலுகார். இவர் தீபாவளியை முன்னிட்டு தனது வீட்டைச் சுத்தம் செய்திருக்கிறார். அப்போது வீட்டிலிருந்த பழைய பொருட்களையெல்லாம் எடுத்து வெளியே வீசும்போது நீண்ட நாட்களாகப் பழைய ஹேண்ட் பேக் ஒன்று வீட்டில் இருந்துள்ளது. பழைய ஹேண்ட் பேக் ஆச்சே, இனிமேல் இதை யார் உபயோகிப்பர் என, அதனுள் என்ன இருக்கிறது என்பதைக் கூட பார்க்காமல் தூக்கி எறிந்துள்ளார்.
பின்னர் தனது வீட்டு வேலைகளை ரேகா பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென அவருக்கு ஒரு ஞாபகம் வந்திருக்கிறது. அப்போது தான் தலையில் கையை வைத்துக் கொண்டு அங்கேயே அமர்ந்துள்ளார். அவர் தேவையில்லை எனத் தூக்கி எறிந்த பழைய ஹேண்ட் பேக்கிற்குள், தான் ஆண்டாண்டு காலமாகப் பாதுகாத்து வைத்திருந்த மாங்கல்யம், வெள்ளிக் கொலுசு உட்பட ரூ.3 லட்சம் மதிப்பிலான நகைகள் அதற்குள் இருந்திருக்கிறது.
உடனே பதற்றமான ரேகா, சஞ்சய் குட்டே என்ற உள்ளூர் சமூக சேவகரைத் தொடர்புகொண்டிருக்கிறார். உடனே அவர் பிசிஎம்சி சுகாதாரத் துறைக்குத் தகவல் கொடுத்திருக்கிறார். ரேகா குடும்பத்தினர் குப்பைக் கிடங்கை நோக்கி பதற்றத்தோடு சென்றிருக்கிறார்கள். அங்கிருந்த ஊழியர்கள் குப்பையைச் சுமந்துசென்ற வாகனத்தைச் சோதனையிடச் சென்றபோதுதான் அனைத்துக் குப்பைகளையும் கிடங்கிற்குக் கொண்டுசென்றது தெரிய வந்திருக்கிறது.
இதனிடையே சுகாதாரத் துறை ஆய்வாளர் கொடுத்த தகவலை வைத்து, டெப்போவின் தரவு ஆய்வாளர் எந்த கிடங்கில் இருக்கும் எனத் தோராயமாகக் கூறியிருக்கிறார். அவர் கூறியபடி தேடிப்பார்த்தபோது, கடைசியாக அந்த ஹேண்ட் பேக் கிடைத்திருக்கிறது. ரேகாவின் குடும்பம் சுகாதாரத் துறைக்கு தங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்திருக்கின்றனர். ‘ஓல்ட் இஸ் கோல்ட்’ என்ற வாக்கியத்தை நிரூபணமாகியுள்ளது இந்த சம்பவம்.