அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது கோபத்தை எப்படி கையாள்வது என்று கற்றுக் கொள்ள வேண்டும் என இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாவதில் இழுபறி நீடித்து வருகிறது. வாக்கு எண்ணிக்கையில் எதிர்க்கட்சி வேட்பாளர் ஜோ பைடன் முன்னிலை வகித்து வருவதால் டிரம்ப் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என அவர் டுவீட் செய்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஸ்வீடனைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான 17 வயது சிறுமி கிரேட்டா தன்பெர்க், டிரம்பிற்கு பதிலளித்து பதிவிட்டுள்ள கருத்து அனைவராலும் பேசப்படுகிறது.
கிரேட்டா வெளியிட்டு உள்ள டுவிட்டில், ‘இது அபத்தமானது. டிரம்ப் தனது கோபத்தை எப்படி கையாள்வது என கற்றுக் கொள்ள வேண்டும். அவர் தனது நண்பருடன் இணைந்து பழைய படம் ஒன்றை பார்க்க வேண்டும். பொறுமையாக இருங்கள் டொனால்ட்’ என பதிவிட்டுள்ளார்.
இதே வார்த்தைகளை கடந்த 11 மாதங்களுக்கு முன்பு டிரம்ப், கிரேட்டாவுக்கு எதிராக பயன்படுத்தி இருந்தார். டைம்ஸ் இதழின் 2019ம் ஆண்டுக்கான சிறந்த நபராக கிரேட்டா தன்பெர்க் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அவர் இவ்வாறு விமர்சனம் செய்திருந்தார். தற்போது தேர்தல் பரபரப்பு சூழலில், டிரம்ப்பை பழிவாங்கும் வகையில் அவரது வார்த்தைகளையே அவருக்கு எதிராக கிரேட்டா பயன்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.