தமிழ்நாடு

“போர்க்கால வேகத்தில் சென்னையைக் காக்கவேண்டும்” – மு.க ஸ்டாலின்

2015-ஆம் ஆண்டு வெள்ளம் மீண்டும் ஏற்படாமல் தடுக்க, சென்னையில் தேவையான முன்னேற்பாடுகளை அ.தி.மு.க. அரசு செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். வடகிழக்குப் பருவமழை தொடங்குகிறது என்று முன்கூட்டியே தெரிந்தும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் காட்டிய அலட்சியத்தால், இன்றைக்கு ஒரு நாள் மழையைக் கூடத் தாங்க முடியாமல் சென்னை மாநகரத்தின் முக்கிய சாலைகள் எல்லாம் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் தொடரப்போகும் வடகிழக்குப் பருவமழையால், சென்னை மீண்டும் ஒரு “டிசம்பர் 2015” வெள்ள அபாயத்தைச் சந்திக்கப் போகிறதோ என்ற அச்சம் மக்கள் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.

மழைநீர் வடிகால் வாய்களை முறைப்படி முன்கூட்டியே தூர்வாரி, சீரமைத்து வேண்டிய இடங்களில் அகலப்படுத்தி, இந்தப் பருவ மழையைச் சந்திக்கச் சென்னை மாநகராட்சி தயாராகியிருக்க வேண்டும். அதற்காக ரூ.750 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதும் அதில் வரலாறு காணாத முறைகேடுகள் தலை தூக்கியுள்ளதும் ஏற்கனவே அறப்போர் இயக்கத்தின் சார்பில் கூறப்பட்டது. சிண்டிகேட் அமைத்து சந்தை மதிப்பைவிட அதிக விலைக்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளாட்சித்துறை அமைச்சருக்கு வேண்டிய ஒப்பந்தக்காரர்களுக்கு டெண்டர்கள் வழங்கப்பட்டு முறைகேடு நடைபெற்றது வெளிச்சத்திற்கு வந்தது. ஆனால் லஞ்ச ஊழல் தடுப்புத் துறையும் இது பற்றிக் கண்டுகொள்ளவில்லை. சென்னை மாநகராட்சியில் உள்ள விஜிலென்ஸ் பிரிவும் இதுபற்றி விசாரிக்க முன்வரவில்லை.

கொரோனாவில் தோற்ற சென்னை மாநகரம், இப்போது ஒரேயொரு கனமழைக்குத் தோற்று நிற்பதும் இது மாதிரியொரு உள்ளாட்சி நிர்வாகத்தை அளிக்கும் எஸ்.பி.வேலுமணியும் அவருக்கு உற்ற துணையாக இருந்து ஊழல்களுக்குப் பின்பாட்டுப் பாடிக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமியும், மாநகரம் எங்கும் தேங்கிக் கிடக்கும் தண்ணீரைப் பார்த்து வெட்கப்பட வேண்டும்; வேதனைப்பட வேண்டும். சென்னை மாநகருக்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்தியிருந்தால் இப்போது குறைந்தபட்சம், கவுன்சிலர்களாவது மக்களோடு துணைநின்று, குறைகளைத் தீர்த்து வைப்பார்கள். அதற்கான வாய்ப்பையும் கெடுத்துவிட்டு அமர்ந்திருக்கும் அ.தி.மு.க. அரசு அதிகாரிகளையும் ஊழலில் ஈடுபட வைக்கும் பயிற்சியை மட்டும் நன்கு அளித்து, சென்னை மாநகராட்சி நிர்வாகத்தையே கேலிக் கூத்தாக்கியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் உடனடியாக மழைநீர் வடிவதற்கான அவசரகால நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களுக்குப் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏழை எளியோருக்கு உணவு உள்ளிட்டவற்றிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அ.தி.மு.க. அரசால் முடியவில்லை என்றால் தயவு செய்து பேரிடர் மீட்புப் படையை அழைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தி வைத்து, சென்னை மாநகரைக் காப்பாற்ற போர்க்கால நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மீண்டும் ஒரு டிசம்பர் 2015 வெள்ளம் ஏற்பட்டுவிடாமல் தடுக்கத் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் அ.தி.மு.க. அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் விரிவான முறையில் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் அதே வேளையில், தி.மு.க.வின் சென்னை மாநகர் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிரமப்படும் மக்களுக்கு ஆங்காங்கே தேவையான அளவு உதவிட முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.