முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் இன்று ஆலோசனை
தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு வரும் 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது. பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்துள்ளது. வரவுள்ள பண்டிகை காலத்தையொட்டி, பொருட்களை வாங்க மக்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால், மீண்டும் கொரோனா பரவும் அச்சம் நிலவி வருகிறது. இந்நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். இதனைத் தொடர்ந்து மருத்துவ நிபுணர்களுடன் மாலையில் ஆலோசிக்கிறார். அப்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கருத்துகளை கேட்க இருகிறார்.
அதில் வர்த்தகப் பகுதிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது. பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து இறுதி முடிவெடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, பொருளாதார நிலையை சீரமைப்பது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையிலான குழு, தனது அறிக்கையை கடந்த 21-ம் தேதி தாக்கல் செய்திருந்தது. இந்த அறிக்கை மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.