“நியாயவிலை கடைகளில் வெங்காயத்தை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” – அமைச்சர் செல்லூர் ராஜூ
தமிழகத்தி்ன் பெரும்பான்மையான வெங்காய தேவையை, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களே பூர்த்தி செய்கின்றன. இம்மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால், தமிழகத்திற்கு வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக வெளிச்சந்தையில் வெங்காயம் விலை 100 ரூபாய், 120 ரூபாய் என்று, கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்நிலையில், பெரிய வெங்காயம் கிலோ 45 ரூபாய்க்கு பண்ணை பசுமை அங்காடிகளில் விற்க, தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தின் 16 மாநகராட்சிகளில் இன்றும், மாவட்டங்களில் உள்ள பண்ணை பசுமை அங்காடிகளில் நாளை முதலும் விற்பனை தொடங்குகிறது. சென்னை தேனாம்பேட்டை கூட்டுறவு சிறப்பங்காடியில், வெங்காய விற்பனையை, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், பெரிய வெங்காயம் 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய ஏற்பாடு. செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடக மாநிலங்களில் மழைக்காலம் காரணமாக வெங்காய வரத்து குறைந்ததால் விலை அதிகரித்து இருப்பதாக தெரிவித்தார். தமிழகத்தில் ஆண்டிற்கு 6 லட்சம் டன் பெரிய வெங்காயமும் 4 லட்சம் டன் சின்ன வெங்காயம் என 10லட்சம் டன் வெங்காய தேவை உள்ளதாக தெரிவித்தார். மேலும் விலை நிலைப்படுத்துதல் நிதியத்தின் மூலம் ஏற்கனவே 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு அந்த நிதியின் மூலம் விலை உயரும் உணவு பொருட்களின் விலை கட்டுபடுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சர் கூறினார். அதனைத் தொடர்ந்து பேசியவர், இதுவரை 150 டன் வெங்காய கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றும் தேசியவேளாண் இணையத்தின் மூலம் வெங்காய கொள்முதலுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்றும் கூறினார்.