தமிழகத்தில் திரையரங்குகள் விரைவில் திறக்கப்படுமா? முதல்வரைக் காணத் தயாராகும் திரையரங்கு உரிமையாளர்கள்…
தமிழகத்தில் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் இருக்கிறது. இதற்கு விடையளிக்கும் விதமாக திரையரங்கு உரிமையாளர்கள் சில கோரிக்கைகளுடனும், சில உறுதிமொழிகளுடனும் முதல்வரை சந்திக்க இருக்கிறார்கள். கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் மார்ச் மாதம் மூடப்பட்ட திரையரங்குகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. ஆனால் தமிழகத்தில் அதுகுறித்த எந்த முடிவும் இன்னும் எடுக்கப்படவில்லை. இதுபற்றி அமைச்சரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு இன்னும் இரண்டு தினங்களில் முடிவு எட்டப்படும் என பதிலளித்துள்ளார். இந்தநிலையில், திரையரங்கு உரிமையாளர்கள் முதல்வரை சந்தித்து இரண்டு தினங்களில் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார்கள். அப்போது கொரோனா காலத்தில் தாங்கள் திரையரங்குகளில் கடைபிடிக்கவிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துரைக்க இருக்கிறார்கள்.
இலவச மாஸ்க் வழங்குதல், திரையரங்க பணியாளர்கள் கையுறை அணிதல், ஐம்பது சதவீத இருக்கைகளை மட்டுமே நிரப்புதல், ஆன்லைன் டிக்கெட் முறையை ஊக்குவித்தல் உள்ளிட்டவை இதில் அடங்கும். முதல்வரை சந்திக்க இருக்கும் திரையரங்கு உரிமையாளர்கள் கொரோனா கால நஷ்டத்தை ஈடு செய்ய சில கோரிக்கைகளையும் முதல்வரிடத்தில் வைக்கவுள்ளார்கள். உள்ளாட்சி வரியினை ரத்து செய்தல், ஓராண்டுக்கு ஒரு முறை உரிமம் புதுப்பிக்கப்பட வேண்டும் என்ற சட்டத்தை திருத்தி அதனை மூன்று ஆண்டுகள் ஆக்குதல், பெரிய திரையரங்குகளை பிரித்து சிறிய திரையரங்குகளாக மாற்ற அனுமதி வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்படவுள்ளன. திரையரங்கு உரிமையாளர்களுக்கும், தமிழக அரசுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டால் இந்த வாரம் அல்லது நவம்பர் 1ஆம் தேதி முதல் திரையரங்குகள் தமிழகத்தில் திறக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.