சாதிச் சான்றிதழ் மறுக்கப்படுவதால் – மாணவி தற்கொலை முயற்சி..!
கன்னியாகுமரி மாவட்டம் தேவிகோடு பகுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமுதாய பெண் வேதிகா (21). இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நர்சிங் பயின்று வந்தார். அங்கு அவருக்கு தேர்வின்போது சாதிச் சான்றிதழ் சமர்பிக்காததால் கல்லூரியிலிருந்து இடைநிறுத்தம் செய்தனர். தொடர்ந்து அந்த மாணவி கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் இணைந்து படித்து வந்தார். அங்கும் அவருக்கு சாதிச் சான்றிதழ் தேவைப்பட்டது. அதற்காக அவர் சாதிச் சான்றிதழ் வேண்டி விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். ஆனால் அவருக்கு சாதிச் சான்றிதழ் மறுக்கபட்டதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து அவர் நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்ற உத்தரவில் மாணவிக்கு சாதி சான்றிதழ் வழங்க உத்தரவு பிறப்பித்தது. இருந்தும் வட்டாட்சியர் பல்வேறு குறைகளைச் சொல்லி சாதிச் சான்றிதழை வழங்காமல் இருந்து வந்துள்ளார். இதனால் மாணவியின் கல்வி கேள்விக்குறியானது. இதனால் மனமுடைந்த மாணவி வேதிகா கடந்த 7ம் தேதி விஷம் அருந்தி தற்கொலை முயற்சி மேற்கொண்டார். இதனையடுத்து அவர் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவிக்கு மறுக்கப்பட்ட சாதிச் சான்றிதழை உடனடியாக வழங்கக் கேட்டும், சான்றிதழ் வழங்க மறுத்து மாணவியை தற்கொலைக்குத் தூண்டிய வட்டாட்சியரை உடனடியாக கைது செய்ய கேட்டும் விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தலித் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளுக்கு இடைத்தரகராகச் செயல்பட்டு வரும் ஜெயக்குமார் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று மாணவி வேதிகா கோரினார். தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாணவியிடமும் அவரது தாயிடமும் அன்று இரவு அருமனை போலீசார் வாக்குமூலம் எடுத்துள்ளனர். அதன் பின்பு இப்போதுவரையிலும் வட்டாட்சியர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு அதிகாரிகள் என்பதால் போலீசார் இப்படி காலம் தாழ்த்தி வருவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.மாணவி தற்போதும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அதற்காக பெருமளவில் மருத்துவச் செலவாகியுள்ளதாகவும்; கடந்த 3 ஆண்டுகள் செவிலியர் படிப்புக்கு 4.5 லட்சம் ரூபாய் வரை செலவிட்ட நிலையில், உயர் நீதிமன்றம் வரை சென்று சட்டபோராட்டம் நடத்தி நீதிமன்ற உத்தரவு பெற 2 லட்சம் ரூபாய் வரை செலவிட்டதாக கூறப்படுகிறது.