“அனுபவமே பாடம்” – ரஜினி ட்வீட்
ராகவேந்திரா மண்டப சொத்து வரி நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். தவறைத் தவிர்த்திருக்கலாம். #அனுபவமே_பாடம் என ரஜினிகாந்த் ட்வீட் செய்துள்ளார்.
கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு 2019- 2020 ஆண்டுக்கான சொத்து வரி கடந்த பிப்ரவரி மாதம் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரானா தொற்று காரணமாக ராகவேந்திரா திருமணம் மண்டபம் செயல்படாத காலகட்டமான ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதத்திற்கான அரையாண்டு சொத்து வரியாக 6,50,000 ரூபாய் செலுத்த வேண்டும் என கடந்த செப்டம்பர்10-ஆம் தேதி சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், இந்த சொத்து வரியை அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் செலுத்த தவறினால் 2 சதவீத வட்டியை அபராதமாக செலுத்த வேண்டும் எனவும் நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே இந்த நோட்டீசை எதிர்த்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று நீதிபதி பி.டி ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில், மார்ச் மாதம் முதல் திருமண மண்டபம் செயல்படாமல் இருந்ததை ரஜினிகாந்த் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. பேரிடர் காலத்தில் செயல்படாமல் இருந்த திருமண மண்டபத்திற்கு முழு வரி வசூலிப்பது சென்னை மாநகராட்சி விதிகளுக்கு எதிரானது என்பதால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.
மேலும் இது போன்று மனுவை தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததால் அபராதம் விதிக்கப்போவதாக நீதிபதி எச்சரித்ததைத் தொடர்ந்து தனது மனுவை வாபஸ் பெற்று கொள்வதாக ரஜினிகாந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தனது மனுவை வாபஸ் பெற்று கொள்வதாக இன்றைய தினமே மனுதாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.