மூத்த அமைச்சர்கள் முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசனை…
தமிழகத்தில் அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதான கட்சியான அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக ஈபிஎஸ், ஓபிஎஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. செயற்குழு கூட்டத்தில் இது தொடர்பாக காரசார விவாதம் நடந்த நிலையில், அதற்கு பின் இருவருமே தங்களது ஆதரவு மூத்த நிர்வாகிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.கடந்த சனிக்கிழமை ஓபிஎஸ் தேனியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ராஜேந்திரபாலாஜி ஆகியோர் நேற்று மாலை முதல்வர் பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
எம்எல்ஏக்கள் விருகம்பாக்கம் ரவி, சத்யா உள்ளிட்டோரும் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர். இந்த சந்திப்பிற்கு பிறகு சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தனியாக சுமார் அரைமணி நேரம் முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தினார்.பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார். அதிமுகவில் நிலவி வரும் பிரச்சனைகளுக்கு மத்தியில் இந்த சந்திப்பு முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.