சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி செல்லும் விழுப்புரம் கோட்டம் அரசு பேருந்து செங்கல்பட்டு வழியாக சென்றுகொண்டிருந்தது. அப்போது செங்கல்பட்டு சுங்கச்சாவடியை பேருந்து கடக்க சுங்கவரி கட்ட வேண்டும் என்று சுங்கச்சாவடி ஊழியர்கள் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.அதிர்ச்சியடைந்த அரசு பேருந்து ஓட்டுநர் சுங்கச்சாவடி ஊழியர்களிடம் இது அரசு பேருந்து இதற்கு சுங்கவரி வசூலிக்க தேவையில்லை என்று கூறியுள்ளார். ஆனால் பேருந்து சுங்கவரி கட்டாமல் செல்லக்கூடாது என கூறி அங்கிருந்து பேருந்து செல்லாதளவிற்கு சுங்கச்சாவடி ஊழியர்கள் நிறுத்தியுள்ளனர்.பேருந்தில் அமர்ந்திருந்த பயணிகள் அனைவரும் வெகு நேரம் ஆகியும் பேருந்து சுங்கச்சாவடியில் நிற்பதால் கீழே இறங்கி வந்து என்வென்று விசாரித்துள்ளனர். அப்போது அரசு பேருந்துக்கு சுங்கவரி கேட்டதாக ஓட்டுநர் மற்றும் நடத்தனர் கூறியுள்ளனர். மேலும் அதிகாரிகள் சொல்லாமல் சுங்கவரி கட்டமுடியாது என்று இருவரும் கூறியுள்ளனர்.
இதை தொடர்ந்து பயணிகள் அனைவரும் ஒன்றிணைந்து ஆளுக்கு 10 ரூபாய் கொடுத்து 150 ரூபாய் சேகரித்தனர். அதனை பயணி ஒருவர் கட்ட சென்றபோது சுங்கச்சாவடி ஊழியர் ஓட்டுநர்தான் கட்ட வேண்டும் என்று கூறியதால் ஓட்டுநரிடம் பயணிகள் பணம் கொடுத்து சுங்கவரியை கட்டினர்.அரசு பேருந்திற்கு சுங்கவரி கேட்டு வெகுநேரமாக சுங்கச்சாவடியில் பேருந்தை நிறுத்தியதால் பயணிகள் கடுமையாக அவதிப்பட்டனர். மேலும் அரசு பேருந்திற்கு சுங்கவரி வசூலித்தவர்கள் மீது போக்குவரத்துறை அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை வைத்தனர்.