திமுக கூட்டணி கட்சிகள் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்த்து இன்று போராட்டம்!
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகியவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பை மீறி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன. வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என்றும் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு திருப்பி அனுப்பும்படியும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் எதிர்க்கட்சிகள் கூட்டாக கடிதம் மூலம் வலியுறுத்தின.
பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் மூன்று மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்திருக்கும் நிலையில், இந்த மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் நேற்று ஒப்புதல் அளித்தார். அதைத்தொடர்ந்து அரசிதழிலும் வெளியிடப்பட்டது.இந்நிலையில், வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் திமுக தோழமை கட்சிகள் சார்பில் இன்று போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில், காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் பங்கேற்க உள்ளன.