மழை இல்லாததால் கருகும் செடிகள் – வேதனையில் விவசாயிகள்!!!
மானாவாரி நிலங்களில் பயிர்கள் முளைத்து வரும் நிலையில் மழை இல்லாததால் செடிகள் கருகிவருவதால் பயிரை காப்பாற்ற தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றி வருகின்றனர் விவசாயிகள்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் உள்ள மானாவாரி நிலங்களில் மழையை மட்டுமே நம்பி விவசாய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பகுதியில் உள்ள விவசாயிகள் ராபி பருவத்தில் பருத்தி, உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை பயிரிடுவது வழக்கம்.இந்தாண்டு ஆரம்ப காலகட்டத்தில் பெய்த மழையை நம்பி விவசாயிகள் ஆர்வமுடன் நிலங்களை உழுது விதைகளை விதைத்து பயிர்களை பயிரிட்டுவந்தனர். ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் பெய்த மழையை தவிர தற்பொழுது மழை பெய்யமால் பொய்த்து போன காரணத்தினால் நிலங்களில் முளைத்து இருக்கும் செடிகள் கருகும் நிலையில் உள்ளது.
பல நிலங்களில் விதைகள் முளைக்காமல் கருகிபோய் உள்ளது. ஒரு ஏக்கருக்கு 10 முதல் 15 ,000 ரூபாய் வரை செலவு செய்து விளைந்து வரும் பயிர்கள் கருகிப்போவதை கண்டு விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர். மழை பெய்யாத வானத்தினை நோக்கி நொந்து ஒவ்வொரு நாளையும் கடத்தி செல்கின்றனர். சில விவசாயிகள் தங்களது கருகும் பயிர்களை காப்பற்ற வேண்டும் என்பதற்காக நிலங்களில் டிராம்கள் வைத்து, அதில் தண்ணீர் நிரப்பி கருகி போகும் நிலையில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி வருகின்றனர்.தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அவ்வாறு தண்ணீர் ஊற்றியும் செடிகள் கருகிபோகிவிடுவதாகவும், மழை பெய்தால் மட்டுமே செடிகள் தப்பித்து கொள்ளும், இல்லை என்றால் அனைத்து செடிகளும் கருகி போய்விடும் என்கின்றனர் வேதனையுடன்.
நிலம் உழுவது முதல் தற்பொழுது வரை 50,000 வரை செலவு செய்து விதைத்துள்ளதாகவும், ஆனால் மழை இல்லாத காரணத்தினால் செடிகள் கருகி வருவதாகவும், இருக்கிற செடிகளை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக டிரம்மில் தண்ணீர் பெருக்கி ஆள்கள் மூலமாக செடிகளுக்கு ஊற்றி வருவதாகவும், மழை பெய்தால் மட்டுமே தப்பிக்க முடியும் என்கிறார் பெண் விவசாயி சரஸ்வதி.மழையை நம்பி மட்டுமே பயிரிட்டு வந்தோம், மழை இல்லாத காரணத்தினால் செடிகள் காய்ந்து அழிந்து போகும் என்றும், கிராமங்களில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் எடுக்க மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் விலைக்கு தண்ணீர் வாங்கி கருகும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி வந்தாலும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் செடிகள் கருகி அழிந்து விடுவதாகவும், இன்னும் 2 தினங்களில் மழை பெய்யவில்லை என்றால் செடிகளை காப்பாற்ற முடியாது என்கிறார் விவசாயி பழனிச்சாமி.
பயிர்கள் முளைத்து வரும் நிலையில் மழை இல்லாத காரணத்தினால், அவை கருகும் நிலையில் உள்ளது. மழையை வைத்து தான் எங்களுடைய வாழ்வாதரம் உள்ளது. பல ஆயிரம் செலவு செய்து எங்களுக்கு எவ்வித பலனும் இல்லாத நிலை உள்ளது. எனவே அரசு விவசாயிகளுக்கு உதவ வேண்டும், இழப்பீடு வழங்க வேண்டும் என்கிறார் விவசாயி செல்வக்குமார்.ஆரம்ப காலகட்டத்தில் பெய்த மழையை நம்பி பல ஆயிரம் செலவு செய்து விவசாயிகள் விதைப்பு பணிகளை மேற்கொண்ட நிலையில் செடிகள் முளைத்து வரும் நிலையில் மழை இல்லாமல் கருகி போவதை கண்டு விவசாயிகள் வேதனையுடன் பார்த்து வருகின்றனர். இனிமேல் கடன் வாங்கி விவசாயம் செய்ய முடியாது என்பதால் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்கிறார்.