நூதன முறையில் பணத்தைத் திருடிய டிப்டாப் ஆசாமி கைது…
சென்னை ராயப்பேட்டையில் வில்சன் என்பவர் பிஸ்கட்டுகள் சப்ளை செய்து வருகிறார். ஓட்டல் ஒன்றில் பிஸ்கட் சப்ளை செய்து நின்று கொண்டிருக்கும்போது, ஐம்பது வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் 2000 ரூபாய்க்கு சில்லரை வேண்டும் என கேட்டுள்ளார். தன் கையிலுள்ள சில்லறை நோட்டுகளை அந்த நபரிடம் வில்சன் கொடுத்துள்ளார். வில்சனின் கவனத்தை திசைதிருப்பி டிப்டாப் ஆசாமி 2000 ரூபாய் சில்லறை பணத்துடன் மாயமாகியுள்ளார். இது தொடர்பாக அபிராமபுரம் காவல் நிலையத்தில் வில்சன் புகார் அளித்தார். இதனையடுத்து சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் சுதாகர் தனிப்படை போலீசார் தலைமை காவலர் சரவணன் சிசி டிவி காட்சிகளை வைத்து டிப் டாப் ஆசாமியை தேடி வந்தனர்.
போலீசார் தேடியதில் பட்டினப்பாக்கத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரை கைது செய்தனர். விசாரணை செய்ததில் சென்னையில் பல்வேறு இடங்களில் நூதன முறையில் பொதுமக்களிடம் மோசடி செய்யும் டிப்டாப் மோசடி மன்னன் என்பது தெரியவந்துள்ளது. சென்னையில் உள்ள முக்கிய வங்கிகளான பேங்க் ஆப் பரோடா எஸ்பிஐ, இந்தியன் வங்கி ஆகிய வங்கி கிளைகளில் டிப்டாப்பாக ஆடை உடுத்திக்கொண்டு வாசலில் நிற்பார்.
வங்கி சேவை முடியும் நேரத்திற்கு பத்து நிமிடத்திற்கு முன்பாக வங்கி வாசலில் நின்றுகொண்டு வங்கி ஊழியர் போல் பொதுமக்களை வழிநடத்துவார். அவர்களுக்கு வங்கிக்கணக்கில் பணத்தை போடுவதற்கு அல்லது எடுப்பதற்கு உதவுவது போல் சலான் நிரப்ப சொல்வார். அதை நம்பி சலான் நிரப்பிக் கொடுப்பவர்கள் மற்றும் பணம் கொடுப்பவர்கள் ஆகியோரை வங்கியின் வெளியில் இருக்கையில் அமர வைத்துவிட்டு, பணத்துடன் மாயமாகி விடுவார்.மின் கட்டணம் செலுத்தும் இடங்களில், கவுண்டர் மூடும் சமயத்தில் தான் மின் கட்டணம் கட்டி தருவதாக கூறி பலரிடம் ஏமாற்றி இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் கடைகளிலும் 2000 ரூபாய்க்கு சில்லறை கேட்பது போல் நடித்து சில்லறையை மட்டும் பெற்றுக்கொண்டு கடைக்காரர்கள் கவனத்தை திசைதிருப்பி பணத்தை ரமேஷ் ஏமாற்றி சென்றுள்ளார்.
இந்த நூதன மோசடிகள் தொடர்பாக எழும்பூர், கீழ்ப்பாக்கம் , ஓட்டேரி செம்மஞ்சேரி, சிந்தாதிரிப்பேட்டை, துரை பாக்கம், பட்டினப்பாக்கம், ஆகிய காவல் நிலையங்களில் பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் ரமேஷ் மீது நிலுவையில் உள்ளன. சில வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.