“ஐபிஎல் போட்டிகளை திரையரங்குகளில் ஒளிபரப்ப அனுமதி இல்லை” – அமைச்சர் கடம்பூர் ராஜூ.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வரும் 12ந்தேதி அதிமுக கட்சி ஜெயலலிதா பேரவை ஆலோசனைக் கூட்டம் மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதில் தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.இந்நிலையில் இதற்கான ஏற்பாடுகள் குறித்த பணிகளை அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும், தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் கடம்பூர்.செ.ராஜூ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனை தொடர்ந்து அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில் இன்றைக்கு திரையரங்கு திறப்பதற்கு பற்றி முடிவு எடுக்காத நிலையில் மற்ற நடவடிக்கைகள் (ஐபிஎல் ஒளிப்பரப்புவது) பற்றி இப்போது பேசுவது சரியாக இருக்காது.
சமூக இடைவெளியுடன் உள்ளவற்றுக்கு தான் தளர்வு அளிக்கபட்டுள்ளது.வணிக நிறுவனங்களில் அரைமணி நேரத்திற்கு மேலாக மக்கள் அனுமதி அளிக்கப்படுவதில்லை. ஆனால் திரையரங்குகளில் மக்கள் 3 மணி நேரம் இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.மத்திய அரசு கடந்த 8-ம் தேதி காணொலி காட்சி மூலமாக திரையரங்கு உரிமையாளர்களிடம் திரையரங்கு திறப்பது பற்றி ஆலோசனை நடத்தியது. திரையரங்கு திறப்பது பற்றி மத்திய அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகள் வழங்கியுள்ளது.இங்குள்ள நிலைமை ஆராய்ந்து, கண்காணித்து தமிழக அரசு திரையரங்கு திறப்பது பற்றி முடிவு செய்யும், அதன் பின்னர் மற்ற அம்சங்கள் (ஐ.பி.எல் ஒளிப்பரப்பு) குறித்து பரீசிலனை செய்யப்படும்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் கன்னியாகுமரி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து தலைமை தான் முடிவு செய்யும், அதிமுக தான் முதன் முதலில் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை தொடங்கியுள்ளது. அதே போன்று முதல் வெற்றியை அதிமுக தான் பெறும் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.