பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் முறைகேடு – விவசாயிகள் குற்றச்சாட்டு
பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தஞ்சை மாவட்ட விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கி பாதுகாக்கும் வகையில் நாடு முழுவதும் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் தங்களுடைய பயிர்களுக்கான காப்பீட்டு தொகையை இ-சேவை மையம் மூலம் செலுத்தி வருகின்றனர்.இந்த சூழலில் தஞ்சாவூர் மாவட்டம் வரகூர் கிராமத்தில் விவசாயிகள் கடந்த 2019 ஆம் ஆண்டிற்கான குறுவை சாகுபடிக்கான பயிர் காப்பீட்டு தொகையை திருவையாறில் அமைந்துள்ள தனியார் சேவை மையத்தில் பணம் செலுத்தி உள்ளனர்.
ஆனால் பணம் செலுத்திய 20க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு அந்த தனியார் சேவை மையம் உரிய ரசீது வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தனது 3 ஏக்கர் நிலத்திற்காக 2 ஆயிரத்து 600 ரூபாய் பயிர் காப்பீடு செய்து அதற்கான ரசீதை பெற்ற விவசாயி பன்னீர்செல்வம், அதனை QR கோடு மூலம் ஸ்கேன் செய்துள்ளார். ஆனால், அதில் தனது பெயருக்கு பதில் சப்பானி முத்து என பெயர் இருந்தத்தை கண்டு பன்னீர்செல்வம் அதிர்ச்சியடைந்ததாக கூறுகிறார்.
இது தொடர்பாக தனியார் இ சேவை மையத்திடம் கேட்டபோது உரிய பதில் வரவில்லை என்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். பயிர் காப்பீடு செய்து ஓராண்டுக்கு மேலாகியும், உரிய ரசீது இல்லாத காரணத்தால் 20க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை.எனவே ரசீது வழங்கப்படாதவர்களின் பெயர்களில் முறைகேடு நடைபெற்றிருக்க வாய்ப்புள்ளதாக குற்றம்சாட்டும் விவசாயிகள், இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தினால், கிசான் சம்மான் திட்ட முறைகேடு போல, பல தகவல்கள் வெளிவரும் என்றும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.