தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் – எடப்பாடி பழனிசாமி..!
விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து முதல்வர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது 102 கோடியே 55 லட்சம் மதிப்பீட்டில் 1 508 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்த முதலமைச்சர், 398 புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். இதன்பின்னர் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்றவர், தொடர்ந்து உரையாற்றினார். அப்போது மரக்காணம் அருகே கூனிமேட்டில் 1480 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், இதன்மூலம் ஏழரை லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவித்தார்.
திண்டிவனத்தில் உணவு பூங்கா அமைக்க 2500 கோடி ரூபாய்க்கு தொழில் முதலீடு ஈர்க்கப்படும் என்றும் கூறினார். இதையடுத்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் அரசின் நிலைப்பாடு எனவும், உச்சநீதிமன்றம் வரை சென்றும் முடியவில்லை என்றும் தெரிவித்தார். பள்ளி திறப்பு குறித்த கேள்விக்கு, பெற்றோரின் மனநிலையை அறிந்து தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என முதல்வர் பதிலளித்தார்.