ஒரு மாதமாகியும் புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய குழு அமைக்கவில்லை.
கடந்த மாதம் மூன்றாம் தேதி பள்ளி கல்வித்துறை மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர், மும்மொழிக் கொள்கையை அரசு ஏற்காது என்ற அறிவிப்பை மட்டும் வெளியிட்டார். இதன் பிறகு புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்களை ஆராய கல்வியாளர்கள் குழு அமைக்கப்படும் என்று தெரிவித்தார். அறிவிப்பை வெளியிட்டு ஒரு மாதம் நிறைவு பெற உள்ள நிலையில் தற்போது வரை பள்ளிக் கல்வித் துறை சார்பிலும், உயர்கல்வித் துறை சார்பிலும் தனித்தனியாக கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படவில்லை.
ஆனாலும், கல்வியாளர்கள் குழுவை அமைக்கவே ஒரு மாதத்திற்கும் மேலாக காலம் கடத்துவது பிரச்சினையை கிடப்பில் போடும் முயற்சியாகும் எனதமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் தியாகராஜன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேட்ரிக் உட்பட பல்வேறு ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் குற்றம் சாட்டியுள்ளனர். குழு அமைக்க காலதாமதம் செய்யாமல் கல்வியாளர்கள் குழுக்களை உடனடியாக அமைத்து, புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் தமிழக அரசு தனது நிலைப்பாட்டை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.